கோலாலம்பூர்: 52 வயது நிரம்பிய சாம்ரி அப்துல் ரசாக் எனும் ஆடவர், இந்து மதத்தை இழிவாகப் பேசியக் காரணத்தினால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக, காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹாருண் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார். அந்த ஆடவர் தனது சமூகப் பக்கத்தில் அச்செயலைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
வெறுப்பு, வன்முறை அல்லது விரோதம், ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டதால், அவர் குற்றவியல் சட்டம் 298ஏ பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவார் என புசி ஹாருண் கூறினார்.
மேலும், 1998-ஆம் ஆண்டுக்கான தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழும் சம்பந்தப்பட்ட ஆடவர் விசாரிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் உள்ள எந்த மதத்தையும், இனத்தையும், சமூகப் பக்கங்களில் இழிவாகப் பேசும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளினால் நாட்டில் தேவையற்ற பதற்ற நிலை உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் எச்சரித்தார்.