Home நாடு மலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது

மலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது

2158
0
SHARE
Ad

சிதம்பரத்தின் – தமிழகத்தில் சிவபெருமான் நாட்டிய உருவத்தில் வீற்றிருக்கும் தில்லை – சிதம்பரத்தில் அண்மையில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாட்டியாஞ்சலி விழாவில், மலேசிய நடனக் கலைஞர் செல்வி அருளரசி சுப்பிரமணியம் தம் மாணவர்கள் ஆறுபேருடன் கலந்து கின்னஸ் சாதனை விருது பெற்றதோடு, ‘சிதம்பரேச நாட்டியக்கலைமணி’ என்னும் விருதும் பெற்றார்.

கின்னஸ் உலக சாதனை நிகழ்த்துவதற்காகத் தமிழகம் தில்லை சிதம்பரத்தில் உலகம் தழுவிய அளவில் 7,500 நடனமணிகளைக் கொண்டு நாட்டியாஞ்சலி கலைவிழா கடந்த மார்ச் 3-ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்குக் கலைஞர் முனைவர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுமாறு செல்வி அருளரசி சுப்பிரமணியம் (படம்) மலேசியாவில் நடத்திவரும் கலைவளர் கோயில் நிறுவனத்திற்கு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்று அவர் பங்குகொண்டு, மாணவிகள் செல்விகள் தஷாலினி கலையரசன், தமிழரசி முருகன், கயல்விழி கலையரசன், தேஜஸ்வினி சத்தியசீலன் வைஷ்ணவி சிசுபாலன், அரிபிரியா முருகன் ஆகிய அறுவரை சிறப்பாக ஆடச் செய்து கின்னஸ் உலக சாதனை நிகழ்வுக்குத் துணைபுரிந்தார். அதன் மூலம் அவரின் கலைவளர் கோயில் நிறுவனத்திற்கு, கின்னஸ் விருது வழங்கப் பெற்றது. பங்கு கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப் பெற்றது. நடன ஆசிரியர் அருளரசி சுப்பிரமணியத்திற்கு ‘சிதம்பரேச நாட்டியக் கலைமணி’ விருது வழங்கப் பெற்றது.

#TamilSchoolmychoice

அருளரசி சுப்பிரமணியம் கிள்ளான் துறைமுகம் வாட்சன் சாலைத் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கினார். தன் தாத்தா முனைவர் முரசு நெடுமாறனிடம் தமிழிலக்கியம் பயின்றார். தொடர்ந்து கற்றுக் கணக்கியல் துறையில் பட்டம் பெற்ற இவர் நம் பாரம்பரியக் கலைச் செல்வத்தை பரப்ப வேண்டும் என்னும் நோக்கத்தோடு கலைவளர் கோயில் என்னும் அமைப்பை நிறுவி கலைத் தொண்டும் ஆற்றிவருகிறார். அவர் முயற்சிக்குப் பெற்றோர் சுப்பிரமணியம் அமுதா இணையர் பக்கபலமாய் விளங்குகின்றனர்.