பிரிட்டன்: ‘மாரி’ படத்தின் மூலமே புறாக்களுக்கும் பந்தயங்கள் விடுகிறார்கள் என்ற செய்தியை பலர் நம்மில் அறிந்திருப்போம். இதற்காக பிபா (Pigeon Paradise) எனும் அமைப்பு உலகளவில் செயல்பட்டு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே நடக்கும் புறா பந்தயங்கள் மற்றும் பந்தயப் புறாக்களை வாங்கவும், விற்கவும் இந்த தளம் உறுதுணையாக அமைகிறது.
இதுவரையிலும், வரலாறு காணாத வகையில் ‘அர்மாண்டோ’ எனும் ஒரு புறா, 5.78 மில்லியன் ரிங்கிட்டுக்கு (1.25 மில்லியன் ஈரோ) விற்கப்பட்டிருக்கிறது. புறா பந்தயத்தில் வெற்றிப் பெற்ற அர்மாண்டோவிற்கு இந்த விலையைக் கொடுத்து சீனர் ஒருவர் பெற்றுக் கொண்டார்.
அர்மாண்டோவை ”புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்” எனவும் அழைக்கிறார்கள். இப்புறா அதிக தூரம் கடந்த மிகச்சிறந்த பெல்ஜியம் புறாவாகும். அர்மாண்டோ ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்னதாக, ஒரு புறா அதிகபட்சமாக 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது.
இது குறித்து பிபாவின் நிருவாக இயக்குனர் நிக்கோலஸ் கூறுகையில், இப்படியொரு விலைக்கு புறா விற்பனையாகும் என அவர் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்றார். ஆனால், ஏலத்தில் திடீரென ஒரு போட்டி ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் 5.32 இலட்சம் யூரோவிலிருந்து 1.25 மில்லியன் யூரோவுக்கு விலையை ஏற்றி விட்டனர் சீனர்கள் என்றார்.
ஆயினும், அது அர்மாண்டோவிற்கு கொடுக்க வேண்டிய விலைதான் என அவர் சுட்டிக் காட்டினார். அர்மாண்டோ, ஒரு வழக்கமான பந்தய புறா அல்ல. அது பங்கேற்ற கடைசி மூன்று பந்தயங்களில் வெற்றிப் பெற்றுள்ளது என அவர் கூறினார்.