ஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 3,311 மாணவர்கள் இந்த ஆண்டில் பள்ளிப் படிப்பை தவறவிட்டிருக்கிறார்கள் என மாநிலக் கல்வி இலாகா தலைவர் முகமட் சாலெ முகமட் காசிம் கூறினார்.
பெரும்பாலான மாணவர்கள் திருமணம், பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் இல்லாமை, இடைநீக்கம் அல்லது பள்ளியை விட்டு நீக்கப்பட்டக் காரணத்தினால் பள்ளிப் படிப்பைத் தொடர இயலாமல் போகிறது என்று சாலெ தெரிவித்தார்.
பெடாலிங் பெர்டானா, கிள்ளான், உலு லாங்கட் மற்றும் கோம்பாக் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிக்கூட படிப்பை பாதியிலேயே விட்டவர்களின் சதவிகிதம் உயர்வாக உள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.
“இடைநிலைப் பள்ளியை விட்டு பாதியிலேயே விலகியவர்களின் எண்ணிக்கையே இதில் அதிகம்” என முகமட் சாலெ கூறினார்.
ஒரு சில மாணவர்கள் குடும்ப சூழ்நிலை, உடல்நலப் பிரச்சினைகள், போக்குவரத்து சிக்கல் மற்றும் போதை பொருள் அடிமை போன்ற பிரச்சனைகளால் படிப்பை தொடர முடியாமல் போகிறது என அவர் குறிப்பிட்டார்.