Home நாடு “மலாயா புரட்சித் தலைவர் எஸ்.ஏ.கணபதி” – நினைவு நாளில் வேதமூர்த்தி புகழாரம்

“மலாயா புரட்சித் தலைவர் எஸ்.ஏ.கணபதி” – நினைவு நாளில் வேதமூர்த்தி புகழாரம்

2472
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – “சமூக நீதிக்காக தம் இன்னுயிரைத் துறந்த தொழிற்சங்கப் போராளி; நேதாஜி கண்ட இந்திய தேசிய இராணுவத்தில் பணி ஆற்றியவர்; இளம் வயதிலேயே மலாயாத் தொழிற் சங்கத்தின் தேசியத் தலைவராக விளங்கியவர். அந்நாளைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே ஈர்த்தவர்; மலாயாவாழ் தமிழ் மக்க-ளின் அடையாளச் சின்னமாக பேரறிஞர் அண்ணாவின் இதயத்தில் இடம் பிடித்தவர்; இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்கிலேய ஆதிக்க ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கியவர் என்றெல்லாம் இன்னும் ஏராளமான சிறப்புகளுக்கு உரியவர் மலாயா கணபதி (படம்)” என பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அமரர் கணபதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

கணபதியின் நினைவு நாளான இன்றைய தினத்தில் அவரது போராட்டங்களையும், தியாகங்களையும் வேதமூர்த்தி அறிக்கை ஒன்றின் வழி நினைவு கூர்ந்தார். அந்த அறிக்கை பின்வருமாறு:

“நேதாஜி கண்ட ஆசாத் இந்து சர்க்கார் என்னும் தற்காலிக இந்திய அரசாங்கத்தில் ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்த கணபதி, இயற்கையிலேயே போராட்ட குணமும் பொதுவுடைமைச் சிந்தனையும் கொண்டவர் என்பதால் அவரால் அந்தப் பணியில் தொடர முடியவில்லை.
அன்றைய மலாயாவில் சிலாங்கூர் கிள்ளான் பகுதியில் ஒரேவிதமான பணியை மேற்கொண்டிருந்த சீனத் தொழிலாளர்களைவிட இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் கொடுக்கப்படுவதாக நீண்டகாலமாக சலசலப்பும் மனக்கசப்பும் நிலவிய நிலையில், ஆங்கிலேய தோட்ட முதலாளிகளோ இதற்குத் துணை போனதுடன் தென்னிந்தியத் தொழிலாளர்களை மேலும் கசக்கிப் பிழிந்தனர்.

#TamilSchoolmychoice

20-ஆம் நூற்றாண்டு தொடக்கக் காலத்தில் கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்கக் கூட்டமைப்பு மலாயா தோட்டப் பாட்டாளிகளின் உரிமைக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது. சிறு வயதிலேயே ஒரு பெருந்தலைவருக்குரிய சிறப்புடன் விளங்கிய எஸ். ஏ. கணபதி, ஊக்கமுடையவராகவும் செயல் திறன் மிக்கவராகவும் இருந்தார். மலாயாவில் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வலிமை மிக்கத் தலைவராக விளங்கியதுடன், 1940-இல் கிள்ளானில் இந்தியத் தொழிலாளர்களின் சம்பள மோசடிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தார். நேரடியாகவே, ஆங்கிலேய தோட்ட முதலாளிகளை எதிர்த்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான், சிலாங்கூரில் ரவாங், பத்து ஆராங் ஆகிய இரு சிறு நகரங்களுக்கு இடையில் அமைந்திருந்த வாட்டர்ஃபோல் தோட்டத்தில் கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியுடன் துப்பாக்கி ரவைகளும் வைத்திருந்தார் என்று அவர் மீது அவசரம் அவசரமாக குற்றம் சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரண்டே மாதங்களுக்குள் தூக்கிலிடப்பட்ட எஸ். ஏ. கணபதி, 1949 மே மாதம் 4-ஆம் நாளில் புடு சிறை வளாகத்தில் தூக்கில் இடப்பட்டார்.

வாழ வேண்டிய வயதில் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் மலாயாவின் விடியலுக்காகவும் பாடுபட்ட கணபதி தஞ்சை மண்டலத்தில் 1912-ஆம் ஆண்டில் இன்றைய இதே நாளில் (மார்ச் 23) பிறந்தார்.

மலேசிய இந்தியர்களின், குறிப்பாக தோட்டப் பாட்டாளிகளின் போராட்ட வாழ்க்கை, நலிந்த நிலை யாவும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும், அவர்களுக்காகப் பாடுபடும் மனவலிமையையும் உறுதியையும் கணபதியைப் போன்ற தலைவர்களின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கிறது.

இன்றைய இளைஞர்களும் கணபதி அவர்களின் தியாக வாழ்வை எண்ணிப் பார்த்து தம் மனதில் பதிய வைத்து எதிர்காலத்தில் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.

மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றிலும் ஹிண்ட்ராஃப் உறுப்பினர்களின் மனங்களிலும் மலாயா எஸ்.ஏ.கணபதி என்றென்றும் நிலைத்திருப்பார்.”