
கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள மொராதுவா பல்கலைக் கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22 மார்ச்) தொடங்கி இரண்டு நாட்களுக்கு எழுத்துரு மென்பொருள் வடிவமைப்பு, எழுத்துருவியல் பயன்பாடு மீதான கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. இந்த அம்சங்கள் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் சமூகத்தில் எவ்வாறு கட்டமைக்கின்றன என்பது குறித்த இலக்கோடு இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அனைத்துலக நிலையில் பல முக்கிய தொழில்நுட்ப அறிஞர்களும், வடிவமைப்பாளர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கருத்தரங்கில் மலேசியாவில் கணினி தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறனும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்தக் கருத்தரங்கத்தை மொராதுவா பல்கலைக் கழக துணைத் தலைவர் இன்று காலை தொடக்கி வைத்தார். அவர் தனதுரையில் சிறுவயது முதலே மாணவர்களுக்கு எழுத்துரு வடிவங்களை கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்தகைய அம்சங்களைக் கற்பிக்க இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களில் இதற்கென சிறப்பு சடங்குகள் கடைப்பிடிக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். அனைவரும் சிங்கள மற்றும் தமிழ் எழுத்துரு வடிவங்களை அறிந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
அவரது தொடக்க உரையைத் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் கிகான் தாயஸ் வட்டார மொழிகள் மீதான முக்கியத்துவமும், கவனக் குவிப்பும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
யூனிகோடு அடிப்படையிலான முதல் எழுத்துரு உருவாக்கப் பட்டறை இலங்கையில் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறனால் 2002-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதையும் கிகான் தாயஸ் நினைவு கூர்ந்தார்.
- கெர்ரி லியோனிதாஸ் – பிரிட்டன் ரீடிங் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் அனைத்துலக எழுத்துரு மன்றத்தின் தலைவர்
- பூஜா சக்சேனா – இந்தியாவின் எழுத்துரு வடிவமைப்பாளர்
- லலிண்ட்ரா நாணயக்காரா – வடிவமைப்புக்கான செயல் இயக்குநர், இலங்கை லியோ பர்னர்ட் நிறுவனம்
- பதும் இகோடவாட்டா – எழுத்துரு வடிவமைப்பாளரான இவர் கருத்தரங்கின் நெறியாளராக செயல்படுவார்.
இலங்கையின் மொராதுவா பல்கலைக் கழகத்தின் கட்டிடக் கலை வடிவமைப்பு ஆராய்ச்சிப் பிரிவு இந்த கருத்தரங்கை அனைத்துலக எழுத்துருவியல் மன்றத்துடன் சேர்ந்து நடத்துகிறது. அக்குரு கொலக்டிவ் (Akuru Collective), விளம்பரங்களுக்கான அனைத்துலகக் கழகத்தின் இலங்கைப் பிரிவு, அனைத்துலக எழுத்துரு மன்றம் ஆகிய அமைப்புகளும் மொராதுவா பல்கலைக் கழகத்துடன் இக்கருத்தரங்கை ஒட்டிய சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த மாநாடு குறித்த கூடுதல் தகவல்களைக் கீழ்க்காணும் இணைய இணைப்பில் காணலாம்: