Home நாடு டான்ஸ்ரீ பாலா: ஒரு மனிதனின் உயர்வும் – வீழ்ச்சியும்!

டான்ஸ்ரீ பாலா: ஒரு மனிதனின் உயர்வும் – வீழ்ச்சியும்!

826
0
SHARE
Ad

(கடந்த செவ்வாய்க்கிழமை, மார்ச் 26-ஆம் தேதி சாலை விபத்தொன்றில் அகால மரணமடைந்த டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் குறித்த சில நினைவுகளைப் பகிர்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

ஒரு மனிதன் குறுகிய காலத்தில் எவ்வளவு தூரம் உயரத்திற்கு செல்லலாம் – அதுபோலவே, அதே குறுகிய காலத்திற்குள் எவ்வளவு அதலப் பாதாளத்திற்குள் வீழலாம் – என்ற விதிமயமான வாழ்க்கைத் தத்துவத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கடந்த செவ்வாய்க்கிழமை (26 மார்ச்) அகால மரணமடைந்த ஜோகூரின் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன்.

அவரது ஆரம்ப காலங்களில் அவரைப் பற்றி அவ்வளவாக செய்திகள் வெளிவந்ததில்லை.

#TamilSchoolmychoice

அவரது தந்தையார் சின்னையா, ஒரு சாதாரண பொதுப்பணி இலாகா (ஜேகேஆர்) ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் ஒரு குத்தகையாளராக (காண்டிராக்டர்) உருவெடுத்தார். அப்போதைய மஇகா ஜோகூர் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ பாசமாணிக்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர் சின்னையா.

தந்தையின் வழியில் குத்தகைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தின் மூத்த மகனான பாலகிருஷ்ணன், சாலைகளை அமைப்பதிலும், அது தொடர்பான பணிகளிலும் நேரடியாக இறங்கி வெயிலென்றும் மழையென்றும் பாராமல் வேலை பார்த்தவர்.

கால ஓட்டத்தில் பாலகிருஷ்ணன் இளம்வயதிலேயே குத்தகைத் தொழில்களில் ஈடுபட்டு, ஜோகூரின் முக்கிய வணிகப் பிரமுகராக உருவெடுத்தார்.

மஇகா கிளைத் தலைவராக அவர் செயல்பட்டு வந்தாலும் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டாத அவர் 2013-ஆம் ஆண்டு அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு தலைமையில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்களில் புயலெனப் பிரவேசித்தார் –  தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிட்டார்.

முதலில் மஇகாவினர் அவரை ஒரு தீவிரமான வேட்பாளராகவோ – வெற்றி வாய்ப்பைக் கொண்டிருக்கும் வேட்பாளராகவோ பார்க்கவில்லை. காரணம், அவருக்கு எந்த ஒரு அரசாங்கப் பதவியோ, பின்புலமோ இருக்கவில்லை.

ஆனால், பிரச்சாரங்கள் தொடங்கியவுடன் பாலாவின் அதிரடி பிரச்சாரங்களால் களநிலவரம் மாறியது.

நாடு முழுவதும் சுற்றிவந்து, தொகுதிகளின் பேராளர்களை ஒரு குழுவாகச் சந்தித்து அவர்களுக்கு சிறந்த உணவகங்களில் விருந்துபசரிப்பும் நடத்தினார் பாலா.

ஒவ்வொரு கூட்டத்திலும் அவரது நடையுடை பாவனை, திருத்தமான உடையலங்காரம், தெளிவான பேச்சு பேராளர்களைக் கவர்ந்தது.

வாழ்க்கையில் எப்படி தான் போராடி மற்ற இன வணிகர்களுக்கு இணையாக வெற்றி பெற்றேன் என்பதை சுவாரசியமாக பாலகிருஷ்ணன் எடுத்துரைத்த விதமும் பேராளர்களிடத்தில் அவருக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

போதாக் குறைக்கு அப்போதைய தேசியத் தலைவர் பழனிவேலுவும் ஆதரவுக் கரம் நீட்ட, மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்றார் பாலா.

மஇகா அரசியலில் இனி அவருக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது என அனைவரும் கருதிய வேளையில் சங்கப் பதிவிலாகா, பாலா வெற்றி பெற்ற 2013 மஇகா தேர்தலை இரத்து செய்து மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து மஇகா இரண்டு அணிகளாகப் பிளவுபட பழனிவேலு ஆதரவு அணியில் தீவிரமாகச் செயலாற்றத் தொடங்கினார் பாலா. எனினும் பின்னர் மீண்டும் கட்சிக்குள் வந்தார்.

ஆனால் அதற்குள், மஇகாவின் கள நிலவரம் மாறியிருந்தது. கட்சிக்குள் திரும்பி வந்தபோது பாலா 2013 தேர்தலின் வழி கட்டமைத்த தனது ஆதரவுத் தளத்தை இழந்திருந்தார்.

எனினும், தனது கிளையின் வழி ஜோகூர் மாநிலத்தில் சில அரசியல், சமூகப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்த வேளையில், அடுத்த அதிரடிப் பாதிப்பு அவரைத் தாக்கியது.

மலாக்காவில் அவரது குத்தகை தொடர்பில் ஊழல் நடைபெற்றதாக ஊழல் தடுப்பு ஆணையம் அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது.

அவரது வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து கொண்டிருக்கும்போது, எவ்வாறு அவர் அந்த வழக்கிலிருந்து மீண்டு வரப் போகிறார் என பலரும் அக்கறையுடனும், ஆர்வத்துடன் கவனித்து வந்தனர்.

காரணம், தனது அணுகுமுறைகளாலும், போக்குகளாலும் அவர் மிக நல்ல மனம் படைத்தவர், பண்பாளர் என பலரது அபிமானத்தையும் குறுகிய காலத்தில் பெற்றிருந்தார்.

அவருடன் நெருக்கமானத் தொடர்புகளைக் கொண்டிருந்த (மூவார்) ஆர்.தியாகராஜன் ஜோகூரில் பாலாவின் நற்பணிகள் குறித்து தனது நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் பதிவொன்றையும் பகிர்ந்து கொண்டிருந்தார். அதன்படி இந்து தர்ம மாமன்றம் ஜோகூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்து சமய வகுப்புகள் நடத்த முன்வந்தபோது அதற்காக 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய நூல்களை வழங்கியதோடு, ஜோகூர் ஜெயா சித்தி விநாயகர் ஆலயம் நிர்மாணிப்பதற்கு இலட்சக்கணக்கான ரிங்கிட் நிதி வழங்கினார் என தியாகராஜன் நினைவு கூர்ந்தார்.

பாலாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் – அதன் முடிவு தெரிவதற்கு முன்பாக – மோசமான சாலை விபத்தொன்றில் காலன் அவரது உயிரை அநியாயமாகப் பறித்து விட்டான்.

அரசியல் களத்தில் ஒரு போராளியாகவும், எடுத்த காரியத்தை தீவிர கவனம் செலுத்தி முடிக்கும் வல்லமை படைத்தவராகவும், வணிகத் துறையில் மற்ற இன சகோதரர்களுக்கு ஈடாக நாமும் திட்டமிட்டுப் போராடி வெற்றி பெறலாம் என வளரும் இந்திய வணிகர்களுக்கு உணர்த்தும் பாடப் புத்தகமாகவும் – எல்லாவற்றுக்கும் மேலாக நற்பணிகள் பல செய்த நல்ல உள்ளம் கொண்டவராகவும், டான்ஸ்ரீ பாலா அவரை அறிந்தவர்களாலும், நண்பர்களாலும், பொதுமக்களாலும், மஇகாவினராலும் எப்போதும் நினைவு கூரப்படுவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

-இரா.முத்தரசன்