Home கலை உலகம் திரைவிமர்சனம் : “ஐரா” – லேடி சூப்பர் ஸ்டாரின் பயணத்தில் ஒரு திருஷ்டிப் பரிகாரப் பொட்டு…

திரைவிமர்சனம் : “ஐரா” – லேடி சூப்பர் ஸ்டாரின் பயணத்தில் ஒரு திருஷ்டிப் பரிகாரப் பொட்டு…

1231
0
SHARE
Ad

சென்னை – எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை, சொந்த வாழ்க்கையிலும், தொழிலிலும் சந்தித்தாலும் தனிப் பெரும் நடிகையாக – லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு உலா வரும் – நயன்தாராவுக்கு திருஷ்டிப் பரிகாரப் பொட்டு அமைந்திருக்கும் படம் ‘ஐரா’.

சென்னையில் ஊடகத் துறையில் (மீடியாவில்) வேலை பார்க்கும் பெண்ணான நயன்தாரா, தனது பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பிடிக்காமல் தனது சொந்த கிராமமான பொள்ளாச்சிக்கு கிளம்புகிறார். அவர் பாட்டி வீட்டில்  தங்கும் சமயத்தில் சில அமானுஷிய சம்பவங்கள் நடக்கின்றன.

அதே வேளையில் சென்னையில் இருக்கும் கலையரசனுக்கு தொடர்புடைய ஒரு பெண் மரணமடைய, அந்த வழக்கு சம்மந்தப்பட்ட சிலர் மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்த இரண்டு கிளைக்கதைக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? இந்த தொடர்கொலைகள்  செய்யும் ஆன்மாவிற்கு பின்னே இருக்கும் காரணம் என்ன என்பதே ஐரா திரைப்படத்தின் கதை. கேஜேஆர் ஸ்டுடியோஸ் (KJR Studios) இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்க,  சர்ஜுன் கேஎம் இயக்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

யமுனா – பவானி என்று நயன்தாராவுக்கு இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள். மிகவும் வழக்கமான உடல் மொழிகளைக் கொண்டிருக்கும் யமுனா கதாபாத்திரத்தை விட, சற்று கறுத்த நிறத்திலும் கிராமத்து தோற்றத்திலும் இருக்கும் பவானி கதாபாத்திரத்திற்கு நடிக்க நல்ல வாய்ப்பு. அந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். பொதுவாகவே திரைத் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, இதில் தனது வழக்கமான வட்டத்திலிருந்து வெளியே வந்திருப்பது சிறப்பு.

நகைச்சுவைக்கு (இதிலும்) யோகி பாபு. சம்பிரதாயத்திற்கு அவர் செய்யும் நகைச்சுவைகள் சிரிப்பை வரவழைக்கவில்லை. கலையரசனின் பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும் அவரது நடிப்பில் ஒரு சிறு செயற்கைத்தனம் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் மற்றும் படத்தொகுப்பாளர் கார்த்திக் கதைக்கு தேவையான அளவு உழைத்திருக்கின்றனர். சுந்தரமூர்த்தி KS அவர்களின் பின்னணி இசை பேய் படத்திற்கே உண்டான வழக்கமான இசை. பாடல்களில் ’மேகதூதம்’ மட்டும் கவனிக்க வைக்கிறது.

கதை மற்றும் திரைக்கதை, பிரியங்கா & சர்ஜுன்.

இயக்குனர் சர்ஜுனுக்கு இது இரண்டாவது படம். இவர் இயக்கிய “எச்சரிக்கை-இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தை விட ’லக்ஷ்மி’ எனும் குறும்படத்தின் மூலம் இன்னும் வெகுவாக பிரபலமானவர். நயன்தாராவின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, திரைக்கதையில் பெரும் சொதப்பல். மூட நம்பிக்கையின் காரணமாக குடும்பத்தினரால் அதிர்ஷ்டமற்றவள் என்றும், அழகு குறைவாக இருப்பவள் என்று சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவலநிலையை சொல்ல முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதை சுவாரசியமாக சொல்லத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

பல முறை பார்த்து அலுத்துப்போன அதே பயமுறுத்தும் காட்சிகள். பொதுவாக இது போன்ற பேய் படங்களில், அந்த ஆன்மா பழிவாங்குவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும். இத்திரைப்படத்தில் அது பலவீனமாக இருந்தாலும் பரவாயில்லை, சற்று சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. கடைசி 15 நிமிடங்களில் பொறுமையிழக்கும் ரசிகர்கள் நேரடியாகவே திரையை நோக்கி கேலி செய்ய துவங்கிவிடுகின்றனர்.

நயன்தாரா  நடிக்கிறார் – அதுவும் பேய்ப்படம் என நம்பி திரையரங்குகளுக்கு வந்தவர்களுக்கு வெறும் ஏமாற்றமே!

-செல்லியல் விமர்சனக் குழு