Home வணிகம்/தொழில் நுட்பம் இரஷியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி விமான விபத்தில் மரணம்

இரஷியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி விமான விபத்தில் மரணம்

729
0
SHARE
Ad
மாஸ்கோ – பாம்பாட்டிக்கு பாம்பால் சாவு என்பார்கள். அதுபோல பணக்காரர்களுக்கு அவர்களின் பணக்காரத்தனமான நடவடிக்கைகளால்தான் மரணமும் நேரும் போலும்!

இரஷியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாக வர்ணிக்கப்படுபவர் நடாலியா பிலேவா (Natalia Fileva). இரஷியாவின் இரண்டாவது மிகப் பெரிய விமான நிறுவனமான எஸ்7 (S7) என்ற நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர் 55 வயதே ஆன நடாலியா.

ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரின் அருகே நடாலியா பயணம் செய்த தனியார் விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் நடாலியா மரணமடைந்தார். அவருடன் பயணம் செய்த மேலும் இருவரும் மரணமடைந்தனர். எனினும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நடாலியாவின் சொத்து மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர் என போர்ப்ஸ் வணிக ஊடகம் மதிப்பிடுகிறது. அவர் நடத்தும் எஸ்7 விமான சேவை நிறுவனத்தில் 96 விமானங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன என்றும், அவை 26 நாடுகளில் உள்ள 181 நகரங்களுக்கு பயணச் சேவையை வழங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.