ரவாங், ஏப்ரல் 2 – கடந்த 21 நாட்களாக, ரவாங் ஆலயத்தில் மலேசிய இந்தியர்கள் பல ஆண்டுகளாக எதிர்நோக்கியுள்ள சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஹிண்ட்ராஃப் தலைவர் பொ. வேதமூர்த்தி நேற்று சுயநினைவிழந்து சரிந்த நிலையில் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ,தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
அவர் தற்போது மருத்துவமனையில் உடல் நலம் தேறி வருகின்றார்.
சிறப்பு யாகத்தில் 1000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டனர்
இதனிடையே ஹிண்ட்ராஃப் அமைப்பின் ஐந்தாண்டு செயல்திட்டம் வெற்றியடையவும், வேதமூர்த்தி ஆரோக்கியத்திற்கும் யாகம் ஒன்றை ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த சிறப்பு யாகத்தில் 1000க்கும் மேற்பட்டஆதரவாளர்கள் திரண்டனர்.
அவர்கள் வேதமூர்த்தியின் உடல் நிலையறிந்து, உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லியும், அவரைக் காணவும் வற்புறுத்த விபரம் வேதமூர்த்தியிடம் சொல்லப்பட்டது.
வேதமூர்த்தி, பொதுமக்களைக் காண தனக்கு அனுமதி மறுக்கப்பட்டால், தாம் சிகிச்சைக்கு ஒத்துழைக்கப்போதில்லை என்று கூறியதால் அவர் மக்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
அவரைக்கண்டதும் ‘ஹிண்ட்ராஃப் வாழ்க,வேதமூர்த்தி வாழ்க’ என கூடியிருந்தவர்கள் முழங்கினர். வேதமூர்த்தி சார்பாக துணைத்தலைவர் வி.சம்புலிங்கம் பேசினார். போராட்டத்திற்கு துணையிருப்பீர்களா என்ற கேள்விக்கு விண்ணதிர ‘இருப்போம்’ என்று அங்கு கூடியிருந்தவர்கள் பதிலளித்தனர்
அதன் பிறகு அவர் தனது மகள் வழங்கிய பாலை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்தார்.
ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கே வாக்கு- இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு
இரு தரப்பு அரசியல் கூட்டணிகளும், ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்திற்கு ஆதரவு அளிக்காவிட்டால், தேர்தலுக்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பது என்று ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையில் வேதமூர்த்தி
டமாய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வேதமூர்த்திக்கு, குடல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.