Home 13வது பொதுத் தேர்தல் ரவுப் தொகுதியில் இங் யென் யென்னுக்கு எதிராக ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர்!

ரவுப் தொகுதியில் இங் யென் யென்னுக்கு எதிராக ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர்!

688
0
SHARE
Ad

Ng-yen-yen-feature

ஏப்ரல் 2 – தாங்கள் உண்மையிலேயே ஒரு பல இனக் கட்சி என்பதை நிரூபிக்க ஜனநாயக செயல்கட்சி (ஜசெக) இந்த முறை தாங்கள் போட்டியிடும் பாரம்பரியத் தொகுதிகள் சிலவற்றில் மலாய்க்கார வேட்பாளர்களை நிறுத்துகின்றது.

பகாங் மாநிலத்தின் ரவுப் நாடாளுமன்றத் தொகுதியில் முகமட்  அரிப் சப்ரி அப்துல் அசிஸ் என்பவரை ஜசெக நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முகமட் அரிப் முன்பு அம்னோவில் தீவிரமாக இயங்கியவர் என்பதோடு, பிரதமர் நஜிப் துன் ரசாக் நெருங்கிய அரசியல் வட்டத்துக்குள் பணியாற்றியவர் என்று அறியப்படுகின்றது.

அண்மையில் ரவுப் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இந்த அறிவிப்பை செய்தார்.

2004-2008 தவணையில் புலாவ் பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் முகமட் அரிப். பின்னர் பிரதமர் நஜிப்பின் பெக்கான் அம்னோ தொகுதியின் தகவல் பிரிவுத் தலைவராக 2000ஆம் ஆண்டு முதல் 2004 வரை பணியாற்றியிருக்கின்றார்.

பெக்கான் அம்னோ தொகுதியின் தலைவர் பிரதமர் நஜிப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவிரமான இணையத் தள எழுத்தாளராகவும் செயல்பட்டு வரும் முகமட் அரிப் ‘சாக்மொங்கோல் ஏகே 47’ (Sakmongkol AK47)என்ற தலைப்பிலான இணையத் தளத்தில் எழுதி வருபவர் என்பதுடன் பிரதமர் நஜிப்பின் நிர்வாகத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்து வருபவர்.

கடந்த ஜனவரி 2012இல் முகமட் அரிப் அம்னோவில் இருந்து விலகி ஜசெகவில்  சேர்ந்தார்.

சுற்றுலாத் துறை அமைச்சரின் தொகுதி ரவுப்

ரவுப் நாடாளுமன்ற தொகுதியின் நடப்பு உறுப்பினரான டாக்டர் இங் யென் யென் மசீசவின் உதவித் தலைவர்களுள் ஒருவர் என்பதுடன் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகின்றார்.

கடந்த 2008 பொதுத் தேர்தலில் 2,752 வாக்குகள் வித்தியாசத்திலேயே இங் யென் யென் வெற்றி பெற்றார் என்பதால், இந்த முறை இந்த தொகுதியில் தேசிய முன்னணிக்கும் ஜசெகவிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங் யென் யென்னும் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அறிவிப்பு எதனையும் செய்யவில்லை. அண்மையில் இதுபற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் இங் யென் யென்னிடம் கேட்டதற்கு அதற்கும் மழுப்பலாகவே அவர் பதில் சொன்னார்.

இந்த முறை 54,320 வாக்குகளைக் கொண்ட இந்த தொகுதியில் 50 சதவீத வாக்காளர்கள் மலாய்க்காரர்கள். சீனர்கள் 40 சதவீதமும் இந்தியர்கள் 6 சதவீதமும் இருக்கின்றனர்.