Home 13வது பொதுத் தேர்தல் ஜோகூர்பாரு பிகேஆர் வேட்பாளர்: முன்னாள் ஜெனரல் முகமட் ஹாஷிம் ஹூசேன்

ஜோகூர்பாரு பிகேஆர் வேட்பாளர்: முன்னாள் ஜெனரல் முகமட் ஹாஷிம் ஹூசேன்

680
0
SHARE
Ad

Mohd-Hashim-JB-PKR-Candidate-Slider

ஜோகூர் பாரு, ஏப்ரல் 3 – அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப் பட்டதைப் போன்று மலேசிய இராணுவத் தலைவராக 1999 முதல் 2002 வரை பணியாற்றிய ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் முகமட் ஹாஷிம் ஹூசேன் ஜோகூர் பாரு பிகேஆர் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

13வது பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தை முன்னணி போர்க்கள மாநிலமாக அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கியுள்ள மக்கள் கூட்டணி தொடர்ந்து பலம் வாய்ந்த வேட்பாளர்களை இந்த மாநிலத்துக்காக அறிவித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

நேற்று ஜோகூர்பாருவில் உள்ள கம்போங் டத்தோ சுலைமான் மெந்திரி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கூட்டணி தலைவர்களோடு கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பைச் செய்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே முகமட் ஹாஷிம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு சிறிது உடல் நலக் குறைவு ஏற்பட்டு பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் அவரது வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப் போனது.

லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் போர் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை முடித்த முகமட் ஹாஷிம் இராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றி ஜனவரி 1999 முதல் டிசம்பர் 2002 வரை மலேசிய இராணுவத் தலைவராகப் பணியாற்றினார்.

அதன் பின்னர் ஓய்வு பெற்று, பாகிஸ்தான் நாட்டின் மலேசியத் தூதராக 2003 முதல் 2006 வரை பணியாற்றினார்.

இந்த முறை 96,515 வாக்காளர்களைக் கொண்ட ஜோகூர் பாரு தொகுதி 51 சதவீத மலாய்க்கார வாக்குகளையும் 43 சதவீத சீன வாக்குகளையும், 5 சதவீத இந்திய வாக்குகளையும் கொண்ட தொகுதியாகும்.

2008 பொதுத் தேர்தலில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிர் அப்துல் சமாட் 25,349 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளராக இந்த தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.

1978ஆம் ஆண்டு முதல் கடந்த 5 தவணைகளாக இந்த தொகுதியை  ஷாரிர் வெற்றிகரமாக தக்க வைத்துக்  கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாரிர் அப்துல் சமாட், பாஸ் கட்சியின் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சமாட்டின் மூத்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.