கோலாலம்பூர் – இசை, நடனம் போன்ற கலைப் பயிற்சிகளில் இளைய சமுதாயத்தினர் ஈடுபடுவது மிகவும் அரிதாகி வரும் காலகட்டம் இது. அதிலும் குறிப்பாக இந்திய மாணவர்கள் பரத நாட்டியம் போன்ற நமது பாரம்பரிய நடனங்களை ஆர்வத்துடன் கற்பது குறைந்திருக்கும் சூழ்நிலையில் நாட்டின் பிரபல இந்து சமய செயற்பாட்டாளரும் மருத்துவருமான டாக்டர் பால தர்மலிங்கம் – டாக்டர் அருணா பாலதர்மலிங்கம் தம்பதியரின் புதல்வன் அறிவின் முத்திரன் படைத்த “சலங்கையின் நாதம்” எனும் பரதநாட்டிய சலங்கை பூசை கடந்த 31 மார்ச் 2019 மாலை மணி 7.30 மணி அளவில் செந்தூல் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் திரளான மக்களின் முன்னிலையில் அரங்கேறியது.
டாக்டர் பால தர்மலிங்கம், ஒரு மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டே இந்து சமய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு, இந்து சமயத்தின் பெருமைகள் குறித்த கட்டுரைகளை தொடர்ந்து நாளிதழ்களில் எழுதி வருபவராவார்.
லாஸ்யா கலைக் கழகத்தில் ஐந்து வயது முதல் பரதமும் தமிழிசையும் கற்று வரும் டாக்டர் பாலாவின் புதல்வன் அறிவின் முத்திரன் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட கலா ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறந்த பரதநாட்டிய படைப்பை படைத்தார். இந்த ‘சலங்கையின் நாதம்‘ சலங்கை பூசை நிகழ்ச்சிக்கு செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். வழக்கறிஞரும் தமிழ் மலர் நாளிதழின் சட்ட ஆலோசகருமான சரஸ்வதி கந்தசாமியும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கடுமையான மழைக்கு இடையிலும் நிகழ்ச்சியைக் காணவந்தவர்கள், கலைந்து செல்லாமல் இறுதி வரை அறிவின் முத்திரனின் நடனங்களை கண்டு இரசித்தனர்.
குருவாயூர் உஷா துரை அவர்கள் நிறுவனராகவும், தலைமையாளராகவும் இருந்து நடத்தி வரும் லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி என்ற கலைக் கழகத்தில் அறிவின் முத்திரன் சிறுவயது முதல் நடனமும் இசையும் பயின்று வருகின்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வரும் லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்திய பாரம்பரியக் கலைகளில் கலைஞர்களாக உருவாக்கியுள்ளது.
தமிழ் நாட்டின் பிரபல இசைக் குடும்பத்தில் பிறந்த குருவாயூர் உஷா துரை ‘கலை மாமணி’ விருது பெற்ற பிரபல மிருதங்க வித்வான் குருவாயூர் துரை அவர்களின் ஒரே புதல்வியாவார்.
நடனம், இசைத் துறைகளில் ஆசிரியராகப் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் உஷா துரை நடன நிகழ்ச்சிகளை வடிவமைப்பது, இசைக் கோர்வை அமைப்பது போன்ற துறைகளிலும் திறன்பெற்றவர் என்பதோடு ஒரு சிறந்த நட்டுவாங்கக் கலைஞருமாவார்.
பல நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். மலேசியாவில் சிறந்த கலைஞர்களை பயிற்சியளித்து உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது லாஸ்யா அமைப்பின் மூலம் செயல்பட்டு வரும் உஷா துரையின் கீழ் தீவிரப் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் அறிவின் முத்திரனும் ஒருவராவார்.