ரந்தாவ்: கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்) வாயிலாக நெகிரி செம்பிலான் மாநிலமும் பயனடைய உள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று வெள்ளிக்கிழமை ரந்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கூறினார்.
புத்ராஜெயா மற்றும் பெய்ஜிங் இடையிலான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் வழிவகுத்தால், இசிஆர்எல் திட்டத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு அவை நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமையும் என குவான் எங் தெரிவித்தார்.
“இது நம்முடைய நாட்டிற்கு மட்டுமல்ல, நெகரி செம்பிலான் மாநிலத்திற்கு ஒரு நல்ல செய்தி” என அவர் குறிப்பிட்டார்.
வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைப்பெற இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியிடமிருந்து எப்படியாவது இந்தத் தொகுதியை கைப்பற்றி விட வேண்டி நம்பிக்கைக் கூட்டணி களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது.
இந்த இசிஆர்எல் திட்டத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் யாரும் தம்மிடம் தற்போதைக்கு கேள்விகள் கேட்கக் கூடாது எனக் கூறிய அமைச்சர், இது குறித்த மேல் விவரங்களை வெளியிடவில்லை.