Home இந்தியா நேரடிப் பார்வை: தமிழ் நாடு தேர்தல் களம் : “இந்து விவகாரங்களால் தடுமாறுகிறதா ஸ்டாலின் கூட்டணி?”

நேரடிப் பார்வை: தமிழ் நாடு தேர்தல் களம் : “இந்து விவகாரங்களால் தடுமாறுகிறதா ஸ்டாலின் கூட்டணி?”

3155
0
SHARE
Ad
தேர்தல் பரப்புரையில் மக்களைச் சந்திக்கும் ஸ்டாலின்

(எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த விவரங்களை சென்னையிலிருந்து நேரடிப் பார்வையாக வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

சென்னை – “தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை களத்தில் முன்னணியில் இருந்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிதான். ஆனால் நாளாக, நாளாக, திமுக கூட்டணி பின்னடைவைக் காண்பது தெளிவாகத் தெரிகிறது. அதில் முக்கிய இடம் வகிப்பது திமுக கூட்டணியினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து பரப்பப்படுவதுதான். ஸ்டாலின் அந்தக் கருத்தைத் தற்காக்கத் தொடங்கியிருப்பதிலிருந்து அந்தக் கருத்து மெல்ல மெல்ல தமிழ் நாட்டு வாக்காளர்களின் மனங்களில் ஊடுருவத் தொடங்கியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இறுதியில் வாக்குகள் ரீதியாக இந்த விவகாரம் திமுக கூட்டணியைப் பாதிக்குமா என்பதை மே 23 முடிவுகள்தான் காட்டும்” என்கிறார் சென்னை விமான நிலையத்தில் நம்மை வரவேற்க நண்பர் ஒருவர்.

இந்த முறை தமிழ் நாட்டுத் தேர்தல் களம் முற்றிலும் மாறியிருக்கிறது. அரசியல் தலைமைகள் மட்டுமல்ல, அணுகுமுறைகளும் மாறியிருக்கின்றன. மாபெரும் கூட்டத்தைத் திரட்டி விடிய விடிய தலைவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் காத்திருக்கும் காட்சிகள் இப்போது அரங்கேறுவதில்லை.

#TamilSchoolmychoice

காரணம், கொளுத்தும் கோடைகால வெயில்!

தகிக்கும் வெயிலும் – அனல் பறக்கும் சமூக ஊடகங்களும்…

ஸ்டாலின், நடத்திய பரப்புரைக் கூட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தும், அனல் பறக்கும் வெயிலால் கூட்டம் கலைந்து சென்றது என படத்துடன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது தமிழக நாளிதழ் ஒன்று!

இன்னொரு காரணம், நவீனத் தொழில் நுட்பங்களால் தற்போது தேர்தல் களம் மேடைகளிலிருந்தும், மக்கள் கூட்டங்களிலிருந்தும், தொலைக்காட்சிகளுக்கும், இணையத் தளங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் தடம் மாறிவிட்டன.

கையில் காகிதக் குறிப்புடன் பேசும் ஸ்டாலின்

கூட்டங்களுக்கு  சென்று வெயிலில் நின்று, தலைவர்களின் உரைகளைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அந்த அளவுக்குக் கவர்ச்சிகரமான உரைவீச்சுகளைக் கொண்ட தலைவர்களும் இன்று களத்தில் இல்லை.

முக்கியத் ‘தலை’களான ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரில் ஸ்டாலின், எழுதிக் கொடுக்கப்பட்ட காகிதத்தைத் தூக்கித் தூக்கிப் பார்த்து  படித்தவாறே ‘பஞ்ச்’ வசனங்களை  உதிர்க்கிறார். எடப்பாடியோ திறந்த வாகனத்தில் வலம் வந்தபடி, கழுத்தோடு சுற்றி வாயருகில் வந்து நிற்கும் மெலிந்த ஒலிபெருக்கியில் மக்களைச் சந்தித்து பரப்புரை நிகழ்த்துகிறார்.

இருவரின் உரைகளையும், மற்ற தலைவர்களின் உரைகளையும் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்புவதாலும், இணையத் தளங்களில் அந்த உரைகள் உடனுக்குடன் பதிவேற்றப்படுவதாலும், தொலைக்காட்சிகளும், இணையமும்தான் இப்போது தேர்தலின் முக்கியக் களங்களாகப் பார்க்கப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் குவியும் கருத்து மழைகளும் அதற்கான பதிலடிகளும் கள நிலவரத்தை ஓரளவுக்கு எடுத்துக் காட்டுகின்றன.

பிரம்மாண்ட பதாகைகள் இல்லாத சென்னை

தமிழகத் தேர்தல் என்றாலே அன்று முதல் இன்று வரை அம்மாநிலத்தைத் தனித்துக் காட்டுவது பிரம்மாண்டமான பதாகைகள்தான் (போஸ்டர்கள், கட்-அவுட்டுகள்).

ஆனால் இந்த முறை சென்னையின் சில பகுதிகளைச் சுற்றி வந்தபோது ஓரிடத்தில் கூட கட்சிகளின் பதாகைகளைக் காண முடியவில்லை. தேர்தல் பரப்புரைகள் நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகளே இல்லை.

சுவர்களில் வேட்பாளர்களின் படங்களையோ, கட்சிகளின் சின்னங்களையோ காணமுடியவில்லை.

தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகள் காரணமாக இந்த முறை எல்லாமே சற்று அடக்கியே வாசிக்கப்படுகின்றன.

சரி இந்து விவகாரத்திற்கு வருவோம்!

ஸ்ரீ கிருஷ்ணர்தான் முன்னோடி – வீரமணி பேச்சால் சர்ச்சை

ஸ்டாலினும், கனிமொழியும் நாங்கள் பகுத்தறிவுவாதிகள் எனத் தொடர்ந்து கூறிவர, ஸ்டாலினின் மனைவி துர்கா ஒரு புறம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்வதும், கனிமொழியின் தாயார் இராசாத்தி அம்மாள் மகளுக்காக ஆலயங்களில் வழிபாடு நடத்துவதும் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

பாஜகவும், அதிமுகவும் ஸ்டாலின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் நாட்டை உலுக்கி வரும் ‘பொள்ளாச்சி’ பெண்கள் விவகாரம் குறித்துக் கூட்டம் ஒன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இதுபோன்ற விவகாரங்களுக்கெல்லாம் ஸ்ரீ கிருஷ்ண பகவான்தான் முன்னோடி எனக் கூறியிருப்பது பலத்த சர்ச்சைகளை  உருவாக்கியிருக்கிறது.

ஸ்டாலினும் அதனைக் கண்டிக்காமல் மழுப்பியிருக்கிறார். வீரமணி பேசியது அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் அல்ல என்றும், பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில்தான் என்றும், அப்படியே அவர் பேசியிருந்தால் அது தவறு என்று ஒருபுறமும், மேற்கோள் காட்டித்தான் அவர் அவ்வாறு பேசினார் மாறாக உள்நோக்கத்துடன் அல்ல என்றும் முன்னுக்குப் பின் முரணாக ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு சமூக ஊடக வளாகத்தில்  சுழன்றடிக்கும் விவகாரம் இதுதான்.

திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வரும் வீரமணியும், ஸ்டாலினும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் எனப் பரவிவரும் கருத்தை இந்த விவகாரம் மேலும் வலிமைப்படுத்தியிருக்கின்றது.

ஆனால், எந்த அளவுக்கு இந்த இந்து விவகாரங்கள் வாக்காளர்களின் மனங்களில் பதியும் – திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளாக மாறும் என்பதையெல்லாம் கணிப்பது இப்போதைக்கு சுலபமல்ல!

ஆனால், இந்த மாதிரியான உரைகளால் திமுக கூட்டணிக்கு – பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட தமிழ் நாட்டில் சற்று பின்னடைவும், தடுமாற்றமும் ஏற்பட்டிருப்பது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனினும் மே 23 முடிவுகள்தான் இந்து விவகாரங்களால் திமுக கூட்டணிக்கு பின்னடைவா என்பதை ஓரளவுக்கு எடுத்துக் காட்டும்!

-இரா.முத்தரசன்