Home இந்தியா நேரடிப் பார்வை: தமிழகத் தேர்தல் களம் : “ராகுலின் வயநாடு வியூகத்தால் வாக்குகளை இழக்கும் திமுக...

நேரடிப் பார்வை: தமிழகத் தேர்தல் களம் : “ராகுலின் வயநாடு வியூகத்தால் வாக்குகளை இழக்கும் திமுக கூட்டணி”

986
0
SHARE
Ad

(எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த விவரங்களை சென்னையிலிருந்து நேரடிப் பார்வையாக வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

சென்னை – இந்தியாவில் தேசியக் கட்சி ஒன்றின் தலைவர் இரு தொகுதிகளில் நிற்பதோ, பிரதமராக வரக்கூடிய ஒருவர் தென்னிந்திய மாநில நாடாளுமன்றத் தொகுதியில் நிற்பதோ புதியதல்ல. ஏற்கனவே இந்திரா காந்தி கர்நாடகாவின் சிக் மகளூரில் நின்றிருக்கிறார்.

2014 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வாரணாசி, காந்தி நகர் என இரு தொகுதிகளில் நின்றார். இரண்டிலும் வென்றார்.

#TamilSchoolmychoice

ஆனால், வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு வங்கியைப் பாதிக்கலாம் எனப் பார்க்கப்படுகிறது.

அடுத்த பிரதமர் என வாய் வலிக்காமல் ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்க ராகுலோ, அமேதியில் தோற்றுவிடுவோமோ என பயந்து வயநாடு பக்கம் ஒதுங்குவது அவரது தோற்றத்தையே கெடுத்து விட்டது.

ஒரு சிலர் மோடியும் அப்படிச் செய்தாரே என்கிறார்கள். ஆனால், மோடி 2014-இல் போட்டியிட்ட புதிய தொகுதியான வாரணாசி, இந்து மதத்தின் முக்கிய நகராகப் பார்க்கப்படுகிறது. கங்கை நதி ஓடும் நகர், இந்துக்கள்  இறந்தவர்களுக்கு இறுதிக் காரியம் செய்யும் இடம், பழமையான ஆலயங்களின் இருப்பிடம், இந்து பல்கலைக் கழகத்தின் பிறப்பிடம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்த வாரணாசி இந்துத்துவா தத்துவத்தின் முகமாகப் பார்க்கப்படும் மோடிக்குப் பொருத்தமான தேர்தல் களமாக அமைந்தது.

2014-இல் அவர் போட்டியிட்ட இன்னொரு தொகுதி அவரது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதி. இதுவும் அவரது கோட்டை. இந்த முறை காந்தி நகர் தொகுதியை பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, வாரணாசியில் மட்டும் நிற்கிறார் மோடி.

ஆனால், ராகுலின் கதையோ வேறு!

நேரு குடும்பத்தினர் வழக்கமாகப் போட்டியிடும் அமேதி தொகுதியில் ராகுலைத் தோற்கடிக்க பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணி கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார் என்பதால் அங்கிருந்து பாதுகாப்புக்காக இன்னொரு தொகுதியில் ராகுல் தஞ்சமடைந்திருக்கிறார் என்ற பரப்புரைகள் மக்களிடம் எடுபடத் தொடங்கியிருக்கிறது.

கேரளாவில் அவர் போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவரைத் தோற்கடிப்போம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக அறிவித்து விட்டு அதற்கேற்ப தீவிர செயலில் இறங்கியுள்ளது.

அதே மார்க்சிஸ்ட் கட்சிதான் தமிழகத்தில் காங்கிரசோடும், திமுகவோடும் கூட்டணி வைத்துள்ளது தமிழக வாக்காளர்களிடையே பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் இது சில பிணக்குகளையும் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

அதனைப் பயன்படுத்திக் கொண்டு அதிமுக கூட்டணியினர் இப்படிப்பட்ட முரண்பட்ட கூட்டணியை எப்படி ஏற்றுக் கொள்வது எனத் தெருத் தெருவாக பரப்புரை நிகழ்த்தி வருகின்றனர்.  இது ராகுலின் தோற்றத்திற்கும், அவர்தான் அடுத்த பிரதமர் என ஸ்டாலின் தொடர்ந்து நிகழ்த்தி வரும் பரப்புரைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் இதையெல்லாம் யோசித்துச் செயல்பட்டாரா, அதற்குரிய ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருப்பது  ஸ்டாலின்தான்.

ஒவ்வொரு தொலைக்காட்சி விவாதத்திலும், அந்த மாநிலம், இந்த மாநிலம் வேறு, கூட்டணிகள் வேறு, என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும், ராகுல் போன்ற – அடுத்த பிரதமராகப் பார்க்கப்படும் ஒருவர் – தான் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தொகுதியின் கள நிலவரங்களை நன்கு ஆராய்ந்து போட்டியில் இறங்கியிருக்க வேண்டும் – அதன் பாதிப்புகள் மற்ற மாநிலங்களில் பிரதிபலிக்குமா என்பதை யோசித்திருக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள்  கருதுகின்றனர்.

வயநாடு தொகுதியில் இறுதியில் ராகுல் வெற்றி பெறலாம்!

ஆனால், அது பிரச்சனையல்ல! வயநாடு வியூகத்தின் காரணமாக, தமிழ் நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வாக்கு வங்கியில் கணிசமான இழப்பு ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

– இரா.முத்தரசன்