Home நாடு 3-வது தொடர் வெற்றியைப் பெற்று அதிரடி படைக்குமா தேசிய முன்னணி?

3-வது தொடர் வெற்றியைப் பெற்று அதிரடி படைக்குமா தேசிய முன்னணி?

714
0
SHARE
Ad

ரந்தாவ் – இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 14 மையங்களில் தொடங்கிய நிலையில் இந்த இடைத் தேர்தலிலும் தனது 3-வது தொடர் வெற்றியைப் பெற்று சக கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலும், தனது ஆதரவாளர்களிடத்திலும் தேசிய முன்னணி நம்பிக்கைக் கீற்றுகளை விதைக்குமா என்ற ஆர்வம் மலேசியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

53 வாக்களிப்பு வரிசைகள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. 20,793 மொத்த வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியின் 11 வாக்காளர்கள் ஏற்கனவே, அஞ்சல் மூலம் வாக்களித்து விட்டனர். 110 முன்கூட்டியே வாக்களிப்பவர்களில் 96 விழுக்காட்டினர் கடந்த செவ்வாய்க்கிழமையே தங்களின் வாக்குகளைச் செலுத்தி விட்டனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் வாக்களிப்பு நிலையங்கள் மூடப்படும்.

#TamilSchoolmychoice

55.51 விழுக்காடு மலாய்க்காரர்கள் (11,615), 18.46 விழுக்காடு சீனர்கள் (3,863), 26 விழுக்காடு இந்தியர்கள் (5,441) இந்தத் தொகுதியில் வாக்காளர்களாக உள்ளனர்.

தேசிய முன்னணி வேட்பாளரும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் கோட்டையாகக் கருதப்படும் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி அவரது பூர்வீக பிறப்பிடம் என்பதோடு, கடந்த கால சிறப்பான சேவைகளால் உள்ளூர் மக்களிடையே அவருக்கு பரவலான அபிமானத்தையும் ரந்தாவ் பெற்றுத் தந்துள்ளது.

அவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி டாக்டர் ஸ்ரீராமை நிறுத்தியுள்ளது. இரண்டு சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர் என்றாலும், போட்டி இரு கூட்டணிகளுக்கும் இடையில்தான் நடைபெறுகிறது.

பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு, அம்னோவின் துணைத் தலைவராக ஹசான் வெற்றி பெற்றிருப்பது, அம்னோவை இடைக்காலத் தலைவராக வெற்றிகரமாக வழி நடத்துவது போன்ற சாதகமான அம்சங்களும் அவருக்கு சேர்ந்து கொள்ள மீண்டும் இங்கே அவர் எளிதாக வெற்றி பெறுவார் என்பதே பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

70 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படும் இந்த இடைத் தேர்தலிலும் – அதுவும் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற இடைத் தேர்தலில் – தேசிய முன்னணி தனது வெற்றியை மீண்டும் பதிவு செய்தால், அது நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும் சவாலாக அமைந்து விடும்.

தேசிய முன்னணி வட்டாரங்களில் உற்சாகமும், கொண்டாட்டங்களும் கரைபுரண்டோடும்.

மலேசிய அரசியலில் மாற்றங்களும் அதைத் தொடர்ந்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்