ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான முகமட் ஹசான், 10,397 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான டாக்டர் ஶ்ரீராம் 5,887 வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 4,510 வாக்குகள் பெரும்பான்மையில் முகமட் ஹசான் வெற்றி பெற்றுள்ளார்.
இதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர்ந்து வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல், மலேசிய இடைத் தேர்தல்கள் வரிசையில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. சுமார் 79.3 விழுக்காட்டினர் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணி மீண்டும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியர்களின் பெருமான்மையான வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் திரும்பியுள்ளது.
இன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்ற ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராமை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னனியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.