சிரம்பான்: அண்மையில் நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இரு பெரிய கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட மலர்விழிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இவ்விரு பெரிய கூட்டணிகளையும் எதிர்த்து நின்ற போதிலும் சரி, பிரச்சாரத்தின் போதும் சரி, குறையாத அவரது துணிச்சலும், நம்பிக்கையும் பலரால் பேசப்பட்டு வருகிறது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, தேசிய முன்னணி வேட்பாளாரான முகமட் ஹசான் உடன் மேடையில் நின்ற ஒரே வேட்பாளர் இவர் மட்டுமே. மேலும், முகமட் ஹசானுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், அவரது 83 வாக்குகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததும், அவராகவே அவருக்கு வாழ்த்துச் சொல்லி குரல் எழுப்பிய நம்பிக்கையையும், தைரியமும் பலரைக் கவர்ந்துள்ளது.
ரந்தாவ் இடைத் தேர்தலில் மலர்விழிக்கு சுமார் 83 வாக்குகள் கிடைத்தன. ஆயினும், அதனைக் கண்டு தாம் மனம் கலங்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவரால் இயன்ற வரையிலும், தமக்காக வாக்களித்த அந்த 83 வாக்காளர்களுக்காக தமது சேவையைத் தொடர்வார் எனத் தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான பெண் வேட்பாளர்கள் மக்களைப் பிரதிநிதிப்பது அரிதான ஒன்று, ஆயினும், மலர்விழிப் போன்று எல்லா பெண்களும் தங்களின் துணிச்சலை இது போன்ற நிலைகளில் வெளிபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் சமூகப் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.