கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை நான்காவது நாளான இன்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் தொடரப்பட்டது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஊழல் விசாரணைக்குத் தொடர்புடையவை என நம்பப்படும் வங்கி ஆவணங்கள் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் ஆவணங்கள், கடந்த 2015-ஆம் ஆண்டில் அம்பேங் வங்கியிலிருந்து பெறப்பட்டதாக தேசிய வங்கியின் மேலாளர் அசிசுல் அட்சானி நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மலேசிய தேசிய வங்கியின் துறை மேலாளர் அசிசுல் அட்சானி அப்துல் காபார், எந்தவொரு தரப்பினரின் அறிவுரைபடி, முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிராக சாட்சியம் கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் குறித்த வழக்கு விசாரணையில் அசிசுல் பொய்யான சாட்சியத்தை வழங்குவதாக நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்விண்டர்ஜித் சிங் எழுப்பியக் கேள்விக்கு அசிசுல் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக அசிசுல் ஒரு சில விவரங்களை மறைப்பதாக ஹர்விண்டர்ஜித் குற்றம் சாட்டியதற்கும் அசிசுல் மறுப்புத் தெரிவித்தார்.
அம்பேங்கில் பரிசோதனை நடத்தியப் பிறகு, காவல் நிலையத்தில் புகார் அளித்த அசிசுல், அம்பேங்கில் கைப்பற்றப்பட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, தாமே, (அம்லா) பணமோசடி பிரிவு 4-கின் கீழ் இந்தக் குற்றத்தினை புகார் அறிக்கையில் புகுத்தியதாகக் கூறினார்.
இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என தனக்கு தெரியுமா என வழக்கறிஞர் கேட்டதற்கு, தெரியும் என அசிசுல் பதிலளித்துள்ளார்.