சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் இன்று 38 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகின்றது. அதே போன்று புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகத்தில் 5.84 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முதல் முறையாக தமிழகத்தில் 12 லட்சம் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.
அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க தங்களின் வாக்குகளை நல்ல ஆட்சியை அமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாக அமைய போகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுத்தும் அதற்கு அடிபணியாமல், தமிழக மக்கள் முறையாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.