புத்ராஜெயா: நம்பிக்கைக் கூட்டணி அரசு சார்பில் அமையவுள்ள தேசிய இந்து அறவாரியம் தொடர்பில் தான் அமைத்துள்ள செயற்குழுவிற்கு அனைத்து சமய அமைப்புகளும் ஒருமித்து ஆதரவு தெரிவிப்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த வாரியம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) புத்ராஜெயாவில் நம்பிக்கை கூட்டணி மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் விளக்கம் அளித்த தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சரும் தேசிய இந்து அறவாரியத்தை முன்னெடுத்துச் செல்பவருமான பொன்.வேதமூர்த்தி விளக்கம் அளிக்கையில், மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் சமய மேன்மைக்கும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் அமையவுள்ள தேசிய இந்து அறவாரியம் தொடர்பில், முதற்கட்டமாக அடிமட்ட அளவில் கருத்துகளை சேகரிக்க வேண்டி இருக்கிறது என்றும் அதன் அடிப்படையில்தான் இந்தக் குழு தன்னால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வழிபாட்டுத் தலங்களின் நிருவாகம் குறித்தோ அவற்றின் தற்போதைய நடைமுறையில் குறிக்கிடுவது பற்றியோ தேசிய இந்து அறவாரியத்திற்கு கடுகளவும் எண்ணம் இல்லை. தவிர, இந்த அறவாரியம் குறித்து கட்டம் கட்டமாக அனைத்துத் தரப்பினரின் கருத்துப் பரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு ஒருமித்த நிலையை எட்டிய பின்னர்தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆனால், ஒரு சில தரப்பினர் இவை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தேசிய இந்து அறவாரியம் குறித்து மாறுபட்ட கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் மேலும் விவரித்தார்.
இந்து அறவாரியத்திற்கு முன்னர் எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் தற்பொழுது ஆதரவு வழங்குகின்றனர். தவிர, இது மத்திய அரசின் சார்பான அமைப்பு என்பதால் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சர் என்னும் வகையில் தனக்கு இருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
எனவே, தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள குழுவினர் பரிந்துரை செய்யும் கருத்துகள் யாவும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவை தேசிய அளவில் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தொடர்ந்து, நம்பிக்கைக் கூட்டணி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யப்பட்ட பிறகுதான் தேசிய இந்து அறவாரியம் முழுமை பெறும். இத்தனை நடைமுறைகளும் முறையாக நிறைவேறிய பின்னர்தான் தேசிய இந்து அறவாரியம் குறித்த முழு அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மேலும் விவரித்தார்.
மலேசிய இந்து அறவாரியம் தொடர்பாக கடந்த இரு மாதங்களாக அனைத்து சமய அமைப்புகளும் ஒருமித்து ஆதரவு வழங்கி வருவது ஒரு வரலாற்றுப் பூர்வ முன்னெடுப்பு என்றும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.