கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்குக்கான இன ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறைமையை அரசு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தை நாம் ஆராய்வோம்” என அவர் நிருபர்களிடம் கூறினார். முன்னதாக, ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி உறுப்பினரான லியோங் யூ சேங், மெட்ரிகுலேஷன் வகுப்புகளுக்கு இன ரீதியிலான இட ஒதுக்கீட்டை முழுமையாக கைவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். அவ்வாறு செய்வது, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, இது குறித்துப் பேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான பூமிபுத்ரா மாணவர்களின் 90 விழுக்காடு இட ஒதுக்கீடும், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் 10 விழுக்காடு இட ஒதுகீடும் தக்கவைத்துக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.
ஆயினும், பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு கூடுதல் இடங்கள் திறக்க வாய்ப்புகள் இருக்கிறதா என அமைச்சரவை கண்டறியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.