சென்னை: இயக்குனர் ஷங்கரின் 25 ஆண்டுக்கால திரைப்பட வாழ்க்கையை கௌரவிக்கும் வகையில், தமிழ் திரைப்பட இயக்குனர்களை ஒன்றிணைத்து, ஷங்கருக்கு வாழ்த்துக் கூறும் வகையில் நிகழ்ச்சி ஒன்றினை இயக்குனர் மிஷ்கின், அவரது அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த ஒன்றுக்கூடலில், இயக்குனர் மணிரத்னம், லிங்குசாமி, கௌதம் மேனன், மோகன் ராஜா, அட்லி, பாண்டிராஜ், பா.ரஞ்சித், வசந்த பாலன் ஆகிய முக்கிய இயக்குனர்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஷங்கருக்கு வாழ்த்துக் கூறும் வகையில், அவர்கள் ‘எஸ்25’ என அச்சிடப்பட்டிருந்த சட்டையை அணிந்திருந்தனர்.
கடந்த 1993-ஆம் ஆண்டுல் ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது இந்தப் படத்திற்கு சிறந்த இயக்குனர் என்ற விருதினை தமிழ் நாடு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற வெற்றிப்படங்களை இயக்கி அவற்றை பிற மொழிகளிலும் வெளியிடும் அளவிற்கு ஷங்கர் உயர்ந்தார். பிரமாண்டம் என்றாலே ஷங்கர் என்ற அடைமொழியையும் தக்க வைத்துக் கொண்டார். இவரது தயாரிப்பில் வெளியான வெயில் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 திரைப்பட வெற்றிக்குப் பிறகு, இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். முதல் முறையாக, ஷங்கரின் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இயக்குனர் ஷங்கரின் திரைப்படப் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துவோம்.