Home வணிகம்/தொழில் நுட்பம் மைக்கா ஹோல்டிங்ஸ் மீது 3 பங்குதாரர்கள் 144 மில்லியன் ரிங்கிட் வழக்கு

மைக்கா ஹோல்டிங்ஸ் மீது 3 பங்குதாரர்கள் 144 மில்லியன் ரிங்கிட் வழக்கு

1104
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொடர்பில் பல புகார்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மூடப்பட்ட அந்த நிறுவனத்தின் 3 பங்குதாரர்கள் அந்நிறுவனத்தின் மீது 144 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொது (சிவில்) வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர். இந்தத் தொகை ஆயிரக்கணக்கான மைக்கா பங்குதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அந்த 3 பங்குதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தப் பணம் காணாமல் போயிருக்கிறது என்றும் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாதிகள் மூவரும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பி.புனிதன் இந்த விவரங்களை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை இன்னும் விற்காமல் இருக்கும் மூவர் மைக்கா ஹோல்டிங்ஸ் மீதும், மேலும் ஐவர் மீதும் இந்த வழக்கைத் தொடுத்துள்ளதாக, இந்த வழக்கின் ஒருங்கிணைப்பாளருமான புனிதன் தெரிவித்தார்.

ஜி டீம் ரிசோர்ஸ் அண்ட் ஹோல்டிங் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம், வெஸ்ட்போர்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கம், எச்எஸ்எஸ் பொறியியல் நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.குணசிங்கம், மைக்கா ஹோல்டிங்ஸ் கலைப்புக்கான அதிகாரி டி.அரசு மற்றும் ஏ.இரமேஷ் ஆகியோரே அந்த ஐவராவர்.

இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எஸ்.எம்.முத்து, பேராக் மஇகா தலைவர் டத்தோ வி.இளங்கோ, ஆர்.அலமேலு ஆகிய மூவராவர். இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த மூவரும் கலந்து கொண்டனர்.

மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களுக்கு பகிர்ந்து விநியோகிக்கப்பட வேண்டிய இந்தப் பெரிய தொகை மாயமாக மறைந்தது எப்படி என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம் என்றும் வழக்கு தொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.