Home நாடு மலேசிய இந்தியர் மக்கள் கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்தது

மலேசிய இந்தியர் மக்கள் கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்தது

292
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மலேசிய இந்திய மக்கள் கட்சி புதிய உறுப்பியக் கட்சியாக நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 22) அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் இணைத்துக் கொள்ளப்பட்ட எம்ஐபிபி என்னும் இந்த புதிய இந்தியர் கட்சியின் தலைவராக பி.புனிதன் செயல்படுகிறார்.

மஇகாவில் சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதி தலைவராகப் பதவி வகித்த பி.புனிதன், பெரிக்காத்தான் கூட்டணியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று மாலை நடைபெற்ற பெரிக்காத்தான் கூட்டணியின் உச்ச மன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியை கூட்டணி உறுப்பினராக அங்கீகரிக்கும் கடிதம் புனிதனிடம் வழங்கப்பட்டது.

எம் ஐ பி பி கட்சியை பெரிக்காத்தான் கூட்டணியில் அங்கம் பெற வாய்ப்பு வழங்கிய கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அவர்களுக்கும் பெரிக்காத்தான் கூட்டணியின் மற்ற தலைவர்களுக்கும், தங்களின் உறுப்பியத்தை ஆதரித்தவர்களுக்கும் புனிதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய அரசியலில் புதிய அத்தியாயம்

கூட்டணியில் இடம் பெற்ற பின்னர் விடுத்த அறிக்கையில் புனிதன் பின்வருமாறு குறிப்பிட்டார் :

“தேசிய முன்னணிக்கு முன்பாக கூட்டணியாக செயல்பட்ட அலையன்ஸ் கட்சியில் 1954-ஆம் ஆண்டில் மஇகா இணைந்தது. அதன் பிறகு எழுபது ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. தங்கள் கட்சியை இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய இனமாகத் திகழும் இந்திய சமூகத்தின்  நலன்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை பெரிக்காத்தான் கூட்டணியின் நகர்வு தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. நாட்டின் தேசிய நீரோட்டத்திலும் மேம்பாட்டிலும் இந்திய சமூகம் பின்தங்கி விடாமல் இருப்பதை எம் ஐ பி பி உறுதி செய்யும். இந்திய சமூகத்தை முன்னேற்றுவதற்கான ஒரு பொருத்தமான, சரியான தேசிய திட்டத்தை வரையறுக்கவும் உருவாக்கவும் எம் ஐ பி பி கடப்பாடு கொண்டிருக்கிறது”.

தங்கள் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கிக் கொள்ள இந்திய சமூகம் பெரிக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் புனிதன் தனதறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

பெரிக்காத்தான் கூட்டணியில் தற்போது பெர்சாத்து, பாஸ், கெராக்கான், சபா புரோக்ரெசிவ் பார்ட்டி ஆகிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. எம்ஐபிபி, ஐந்தாவது கட்சியாக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியர்களின் ஆதரவு சரிந்தது என்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டின.

நெகிரி செம்பிலானில் 21 விழுக்காடு, பினாங்கில் 19 விழுக்காடு, சிலாங்கூரில் 12 விழுக்காடு என இந்தியர்களின் ஆதரவு வாக்கு விழுக்காடு சரிந்தது என ஆய்வுகள் தெரிவித்தன.

ஓர் ஒப்பீடாக பெரிக்காத்தான் கூட்டணிக்கான இந்திய வாக்குகளின் ஆதரவு பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மாநிலங்களில் முறையே 29%, 19%, 14% விழுக்காடுகளாக அதிகரித்தது.