Home One Line P1 டான்ஸ்ரீ இராமா ஐயர் – பல்வேறு அரசாங்க, சமூக, வணிகப் பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர்

டான்ஸ்ரீ இராமா ஐயர் – பல்வேறு அரசாங்க, சமூக, வணிகப் பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர்

757
0
SHARE
Ad

(நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) தனது 88-வது வயதில் காலமான டான்ஸ்ரீ ஜி.கே.இராமா ஐயர், அரசாங்கத் துறைகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். சமூக இயக்கங்கள் மட்டுமின்றி பல்வேறு வணிக நிறுவனங்களிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்த அவரது அறிவாற்றலும், திறனும் பலரது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. அவர் குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

மலேசிய இந்திய சமுதாயத்தின் வரலாற்றில் மறக்க முடியாத ஓர் அங்கம் மைக்கா ஹோல்டிங்ஸ்.

1984 மலேசிய இந்தியர்களிடமிருந்து ஆயிரம் ஆயிரம் ரிங்கிட்டாக வசூலிக்கப்பட்ட முதலீட்டு நிதி, 100 மில்லியன் ரிங்கிட்டாக பல்கிப் பெருகியபோது  மைக்கா ஹோல்டிங்ஸ் இந்திய சமுதாயத்தில் பெரும் நம்பிக்கைகையும், எதிர்பார்ப்பையும் விதைத்தது.

#TamilSchoolmychoice

அடுத்ததாக, இன்னொரு கேள்வியும் எழுந்தது. இவ்வளவு பெரிய அளவிலான நிதியை நிர்வகிக்கப் போகும் நேர்மையும், அனுபவமும் ஆற்றலும் மிக்க இந்தியர் யார் என்ற கேள்விதான்.

மைக்கா ஹோல்டிங்சின் நிர்வாக இயக்குநராக டான்ஸ்ரீ ஜி.கே.இராமா ஐயர் நியமிக்கப்படுவார் என (துன்) ச.சாமிவேலு அப்போது (1985-இல்) அறிவித்தபோது இந்திய சமுதாயமும் “யார் இவர்?” என தனது பார்வையை இவரை நோக்கித் திருப்பியது.

அப்போது வரை அரசாங்கத்துறையிலும், தனியார் துறையிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்த இராமா ஐயரின் கல்வித் தகுதியையும், அனுபவ அறிவாற்றலையும் தெரிந்து கொண்ட இந்திய சமுதாயம் சரியான கரங்களில்தான் மைக்கா ஹோல்டிங்சின் தலைவிதி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என நிம்மதியடைந்தார்கள்.

அதுவரையில் அரசாங்கச் சேவைத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த அனுபவமும், ஆற்றலும் நிறைந்த இராமா ஐயர் மலேசியா ஏர்லைன்ஸ் என்ற மாஸ் விமான நிறுவனம் தொடங்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர். 1970 முதல் 1973 வரை இராமா ஐயர் மாஸ் தலைவராகச் செயல்பட்டார்.

பின்னர் அரசுத் துறையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர் மூலத் தொழில் அமைச்சின் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அமெரிக்காவின் முதல் நிலை பல்கலைக் கழகமான ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இராமா ஐயர்.

அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே அவர் மைக்கா ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அதுவரையில் அரசாங்க சேவைகளில் உயர் பதவிகள் வகிக்கும் இந்தியர் என்ற அளவில் பிரபலமாகியிருந்த அவரது பெயர் இந்திய சமுதாயத்திலும் அதன்பின்னர் எதிரொலிக்கத் தொடங்கியது.

அவரது தலைமைத்துவத்தின் கீழ் மைக்கா ஹோல்டிங்ஸ் சிறப்பாகவும், சர்ச்சைகள் ஏதுமின்றியும் நடைபோட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், 1992-ஆம் ஆண்டில் டெலிகோம் பங்குகள் ஒதுக்கீடு பிரச்சனையில் ஏற்பட்ட சர்ச்சைகள் – அதைத் தொடர்ந்து சாமிவேலுவுக்கும் இராமா ஐயருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இராமா ஐயர் மைக்கா ஹோல்டிங்ஸ் பொறுப்புகளில் இருந்து விலகினார்.

இருப்பினும் அதன் பின்னர் சிஐஎம்பி வங்கி, மலேசியன் இண்டர்நேஷனல் ஷிப்பிங் கார்ப்பரேஷன் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களில் அவர் இயக்குநராகப் பணியாற்றினார்.

பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்

1932-ஆம் ஆண்டில் பினாங்கில் பிறந்த இராமா ஐயர், பாரம்பரியமிக்க, புகழ்பெற்ற குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இவரது துணைவியார் புவான்ஸ்ரீ விஜயலெட்சுமி அமரர் தோபுவான் உமா சம்பந்தனின் நெருங்கிய உறவினராவார்.

இராமா ஐயர் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள், இரண்டு பேரப் பிள்ளைகள் உண்டு.

பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் படித்த இராமா ஐயரின் தந்தையார் வி.கே. கணபதி ஐயர், அதே பிரி ஸ்கூல் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

இராமா ஐயரின் சகோதரர் கிருஷ்ண ஐயர் பினாங்கு பிரி ஸ்கூலின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தவர். மலாக்கா ஆளுநர் துன் காலில் யாக்கோப், ஜோகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஷாரிர் சமாட் ஆகியோர் கிருஷ்ண ஐயரை ஆசிரியராகக் கொண்டு படித்த மாணவர்களாவர்.

இராமா ஐயரின் மற்றொரு சகோதரர் சீனிவாச ஐயர். வழக்கறிஞரான இவர் மற்றொரு வழக்கறிஞரான மெஹ்ருன் சிராஜ் என்பவரை மணந்து இஸ்லாம் மதத்தைத் தழுவி, சுலைமான் அப்துல்லா என்ற பெயரைக் கொண்டார். சட்டத் துறையில் சிறந்த நிபுணராகக் கருதப்படும் அவர் மலாயாப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும் ஆவார்.

தற்போது நடைபெற்று வரும் 1எம்டிபி தொடர்பான வழக்குகளில் அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார் வழக்கறிஞரான (ஹாஜி) சுலைமான் அப்துல்லா.

இவ்வாறாக, ஒரு மிகப் பெரிய குடும்ப பாரம்பரியத்தையும் கொண்டிருந்ததோடு, நீண்டகாலமாக அரசாங்க மற்றும் தனியார் துறை சேவைகளில் தனது  முத்திரையையும் பதித்து, இந்திய சமுதாயத்தின் பெருமையை உயர்த்திய டான்ஸ்ரீ இராமா ஐயர் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) உடல்நலக் குறைவால் காலமானார்.

இரா.முத்தரசன்

பின்குறிப்பு : (டான்ஸ்ரீ இராமா ஐயரின் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை (மார்ச் 19) நடைபெற்று, நண்பகல் வாக்கில் செராஸ் மின்சுடலையில் அவரது நல்லுடல் தகனம் செய்யப்படும்)