Home One Line P1 கொவிட் 19 : இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்களை தனி விமானத்தில் மீட்க விக்னேஸ்வரன்-சரவணன் தீவிர...

கொவிட் 19 : இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்களை தனி விமானத்தில் மீட்க விக்னேஸ்வரன்-சரவணன் தீவிர முயற்சி

1188
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கொவிட் 19 பிரச்சனையால் 841 மலேசியர்கள் 20 நாடுகளில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் என வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது. இவர்களில் 274 பேர்கள் இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

நடமாட்டக் கட்டுப்பாடு தடைகள் அமுலுக்கு வந்த காரணத்தால் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், சென்னையிலும், திருச்சியிலும் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை தனி விமானம் மூலம் கோலாலம்பூருக்கு மீட்டு வர மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் உதவியோடு தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

தனிவிமானத்தில் அவர்களைக் கொண்டு வருவதற்கான செலவுகளை மஇகா மூலம் ஏற்றுக் கொள்ள பெருமனதுடன் விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அநேகமாக திருச்சியில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை சென்னைக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் மூலம் அவர்களையும், சென்னையில் உள்ளவர்களையும் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட சரவணன், இதற்கான வெளியுறவு அமைச்சின் முன் அனுமதியைப் பெற விக்னேஸ்வரன் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓனுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும் சரவணன் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையால் நாடு திரும்ப முடியாமல், திருச்சியிலும், சென்னையிலும் சிக்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் வழங்குவது குறித்தும் வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்த சரவணன், அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அடுத்த ஓரிரு நாட்களில் அல்லது கூடிய விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் சரவணன் தெரிவித்தார்.

நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்துத் தருவதற்கு உதவுவதில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இயக்கமும் முன்வந்துள்ளது.