Home One Line P2 18 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை வீழ்ச்சி

18 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை வீழ்ச்சி

791
0
SHARE
Ad

இலண்டன் – உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் கொவிட் 19 பிரச்சனைகளால் நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடைகளை அமுல்படுத்தத் தொடங்கியிருப்பதால் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டு, எண்ணெய்க்கான தேவைகளும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலைகள் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

அமெரிக்க கச்சா எண்ணெய் பீப்பாய் 24.22 அமெரிக்க டாலர் வரை குறைந்திருக்கிறது. 2002 ஆண்டுக்குப் பின்னர் ஆகக் குறைந்த விலை இதுவேயாகும்.

#TamilSchoolmychoice

பீப்பாய் ஒன்று 20 அமெரிக்க டாலர் வரை கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கணித்திருக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 8 மில்லியன் பீப்பாய்கள்வரை எண்ணெய் கொள்முதல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட் 19 பிரச்சனைகளால் வெர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனம் தனது அனைத்துலக விமானப் பயணங்களை முற்றாக இரத்து செய்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் குறித்துக் கருத்துரைத்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்கோர் மோரிசன் இந்த நிலைமை அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் மற்றும் அந்த கூட்டமைப்பில் இடம் பெறாத நாடுகள் ஆகியவற்றுக்கு இடையில் அவசரக் கூட்டம் கூட்டப்பட  வேண்டுமென ஈராக்கின் எண்ணெய்வள அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓபெக் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும் சவுதி அரேபியாவுக்கும் இரஷியாவுக்கும் இடையில் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து எண்ணெய் விலை மீதான அழுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது.