கொழும்பு: அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் காரணமாக, நாட்டின் பாதுகாப்பு கருதி, மக்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் புர்கா (முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடை) உட்பட அனைத்து வகையான முகத்தை மறைக்கும் ஆடைகளை இன்று திங்கட்கிழமை முதல் அணியக் கூடாது என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதிபடுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் திருநாளின் போது தேவாலயங்கள் நட்சத்திர தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து கல்முனை என்ற பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், அதிரடி படையினருக்கும் இடையே நடந்த மோதலில், பாதுகாப்பு படையினரிடம் சிக்காமல் இருக்க பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்தது.
இதில் மூன்று பெண்கள், ஆறு குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் மேலும் சில பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் புண்படுத்தும் எண்ணத்தில் இம்முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.