ஜோகூர் பாரு: அடையாள அட்டைகளில் மதத்தைக் குறிக்கும் சொல்லினை அகற்றுவதற்கான திட்டத்தை உள்துறை அமைச்சு விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தற்போதைக்கு அது குறித்து எந்த ஓர் அவசர முடிவும் எடுக்கப்படாது என அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை காரணமாக வைத்து எந்தவொரு பிரச்சினையையும் அல்லது சிக்கல்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.
எனவே அரசாங்கத்தின் முழுமையான ஆய்வுகள் முடியும் வரையில்,அடையாள அட்டைகளில் மதத்தின் அடையாளம் நிலைநிறுத்தப்படும் என அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை, செனட்டர் ஹொக் சே, அடையாள அட்டைகளில் மதத்தைக் குறிக்கும் சொல் இருப்பது, நாட்டில் பல்லின மக்களின் ஒற்றுமைக்கு பாதகமாக அமைகிறது என குறிப்பிட்டிருந்தார். அது நீக்கப்பட்டு அனைவரையும் மலேசியர்களாக அடையாளப்படுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.