புத்ரா ஜெயா – முன்னாள் அமைச்சர் ஒருவரின் சிறப்புச் செயலாளர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை தடுத்து வைத்தது.
அவர் சம்பந்தப்பட்ட அமைச்சில் விமானப் பாகங்களுக்கான 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய உபரி இயந்திர பாகங்கள் வாங்கப்பட்டது தொடர்பில் நடைபெற்ற ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
50 வயதுடைய டத்தோ அந்தஸ்து கொண்ட அவர் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
2017-ஆம் ஆண்டு வாக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு நேரடி குத்தகைகள் மூலம் விமானங்களுக்கான உபரி இயந்திர பாகங்கள் வாங்கப்பட்டது தொடர்பில் அந்தச் செயலாளர் கையூட்டு பெற்றார் என்பது விசாரணைகளின் வழி தெரியவந்ததைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது.
இந்த விசாரணையின் தொடர்பில் அந்த முன்னாள் அமைச்சரின் செயலாளருடன் தொடர்புடைய மேலும் சிலர் தடுத்து வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.