கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினொறாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமக்கு 2.5 மில்லியன் ரிங்கிட் பணம் தந்ததாக அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஹபிபுல் ரஹ்மான் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். அப்பணமானது தேசிய முன்னணி கூட்டனியின் அரசியல் நன்மைக்காக பயன்படுத்தப்பட்டது என அவர் கூறினார்.
சட்ட நிறுவனம் ஒன்றுக்கு அப்பணம் காசோலை வடிவில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. “இது அரசியல் பாதுகாப்பு நடவடிக்கையாகும். அரசியல் சார்ந்த இரகசிய தகவகல்ளை சேகரிக்க இப்பணம் பயன்படுத்தப்பட்டது” என ஹபிபுல் கூறினார்.
சில நேரங்களில் தாம் தமது சொந்த பணத்தை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அதனால் அங்கிருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்வார் என்றும் ஹபிபுல் கூறினார்.
கடந்த புதன்கிழமை, ஹபிபுலின் வழக்கறிஞர் அஷ்ரப் அப்துல் ரசாக், நீதிமன்றத்தில் தனது சாட்சியாளருக்காக முன்னாள் சட்ட நிறுவனம் ஒன்று 2.5 மில்லியன் காசோலையைப் பெற்றதாகத் தெரிவித்தார்.