கோலாலம்பூர் – “உலகம் உழைப்பவர்களாலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதனால், அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தகையப் பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்” என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
“உலகில் பலவிதமான அறிவியல் புதுமைகள் கண்டுப் பிடிக்கப்பட்டாலும், அவற்றுக்கும் உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களின் உழைப்பு மிகவும் முக்கியம். வீட்டை உயர்த்திட – நாட்டை உயர்த்திட – நாளைய உலகை வாழ வைத்திட இன்று உழைத்திடும் உன்னதத் தொழிலாளர்களின் கரங்களை போற்ற வேண்டும் – அவர்களை அங்கீகரிக்க வேண்டும். காரணம், உலகம் உழைப்பவர்களாலேயே வாழ்ந்து வருகிறது. அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தகையப் பெருமையையும் சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது ஒன்றுபட்டு உழைத்துக் கொண்டிருக்கும், அவர்களின் உழைப்பினை மனதார பாராட்ட வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனது செய்தியில் குறிப்பிட்டார்.
“நேரம் – காலம் பார்க்காது உழைக்கும் வர்க்கத்தினை போற்றும் நாளாக இந்நாளைக் கொண்டாடுவோம். அந்த வகையில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்பதுடன், அவர்களைப் போற்றிப் பாதுகாப்போம்” என்று நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான விக்னேஸ்வரன், தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
இருப்பினும், நமது கண்களுக்குத் தெரியாமல், உலகம் முழுதும் எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் பல தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வலிகளுக்கு மருந்துபோடும் நன்னாளாக இந்நாள் இருக்க வேண்டும், என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.