Home நாடு “மந்திரம் ஓதுதல் உள்ளும் புறமும் நன்மையை விளைவிக்கும்” – வேதமூர்த்தி

“மந்திரம் ஓதுதல் உள்ளும் புறமும் நன்மையை விளைவிக்கும்” – வேதமூர்த்தி

1346
0
SHARE
Ad

புக்கிட் ரோத்தான் – “மந்திரத்தை ஓதுவது ஒவ்வொருவருக்கும் உள்ளும் புறமும் நன்மையை விளைவிக்கும். அதைப்போல, ஆன்மிகப் பயணத்தில் மந்திரத்தை ஓதும்போதுதான் இந்துப் பெருமக்கள் தங்களின் முழுமையை அடைய முடியும்” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

“இந்திய மாணவர்கள் வன்முறைப் பாதையில் இருந்து விடுபடவும் தங்களின் வாழ்க்கையில் நன்னெறியை அவர்கள் கடைப்பிடிக்கவும் முன்னேற்றம் காணவும் மந்திரம் ஓதும் முறை மிகவும் துணை நிற்கும். அனைத்திற்கும் மேலாக, இளம் பருவத்திலேயே தாங்கள் பாரம்பரியம் மிக்க இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அழுத்தமாக பதிய வைக்கவும் மந்திர உபதேசமும் மந்திர உச்சரிப்பும் துணை நிற்கும்” என்று புக்கிட் ரோத்தான் அருள்மிகு சக்தி பீடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்ற மந்திர உபதேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியபோது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி தெரிவித்தார்.

“இந்துவாகப் பிறந்தவர்கள் தங்களின் வாழ்க்கையை இந்துவாகவே நிறைவு செய்ய வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மந்திர உபதேசம் அளிக்கும். அதேவேளை, மதம் மாறுதல் போன்ற நடவடிக்கையில் இருந்தும் இது தற்காக்கும். ஆன்ம பலத்தையும் ஆன்மிக நெறியையும் வழங்கும் ஆற்றல் மிக்க மந்திரத்தை ஓத, தினமும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கினாலேப் போதும். நம் பொன்னான வாழ்வில் நீதியை நிலை நாட்டவும் நிதி வளத்தைப் பெருக்கவும் கூடிய வகையில் மனதிற்கு திண்மையையும் உடலுக்கு ஆற்றலையும் அளிக்கும். எனவே, ஆன்மிக சான்றோர்களும் குடும்பப் பெரியோர்களும் சிறு வயதிலேயே நம் பிள்ளைகளுக்கு மந்திர உபதேசம் அளிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும்” என்றும் அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

காலை 7:00 மணி அளவில் தொடங்கி பகல் 12:30 மணிவரை நீடித்த இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏழு வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். மலேசிய சனாதன தரும அமைப்பின் ஏற்பாட்டிலும் மித்ரா ஒத்துழைப்பிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மித்ரா தலைமை இயக்குநர் ச.லெட்சுமணன், துணை இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும் பெற்றோரும் அதிகமாகக் கலந்து கொண்டனர். நிறைவாக, இந்த மந்திர உபதேச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த சக்தி பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ முத்துக்குமார சிவாச்சாரியார், மந்திரத்தை அன்றாடம் ஒதி வந்தால் மனதில் இறைவன் குடி இருப்பதுடன் ஏராளமான நன்மைகளும் விளையும். அதேவேளை, அதையும் குரு மூலம் கற்றுக் கொள்வது மாணவர்களுக்கு மிகுந்த பயனைத் தரும் என்று குறிப்பிட்டார்.