கோலாலம்பூர்: அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு ஏதுவாக மெட்ரிகுலேஷன் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், அது குறுக்கு வழியில் பூமிபுத்ரா மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் எனவும் பிரதமர் மகாதீர் முகமட் அண்மையில் கூறியிருந்தது குறித்து, மெட்ரிகுலேஷன் முடித்த பூமிபுத்ரா மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறு குறிப்பிடுவது அந்த நிறுவனத்தின் மதிப்பை குறைத்து அளவிடும் வகையில் இருப்பதாக முகமட் பாஹ்மி ஷாருட்டின் கூறினார். இந்த திட்டத்தின் வாயிலாக நிறைய மலாய் மாணவர்கள் வெற்றிப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
“பிரதமர் கூறுவது போல இத்திட்டம் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குறுக்கு வழி அல்ல, மாறாக மலாய் மாணவர்களை உயர் கல்விக்கு தயார் படுத்தும் திட்டமாக கருதுகிறேன்” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பல்வேறு சோதனைகளைத் தாண்டிதான் மலாய் மாணவர்கள் இந்த வகுப்புகளுக்கு நுழைய வேண்டியுள்ளது. மெட்ரிகுலேஷன் வாயிலாகஇளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ள மலாய்க்கார மாணவர்களை தயார் படுத்தும் நிறுவனம் இது” என அசிம் அஸ்ராப் அப்துல் காபார் கூறினார்.
மெட்ரிகுலேஷன் வகுப்புகள் கடந்த 1999-ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் பூமிபுத்ரா மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டேம்) ஆகியவற்றில் இளங்கலைப் படிப்புகளை பூமிபுத்ரா மாணவர்கள் தொடர்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.