Home நாடு சண்டாக்கான்: வாக்களிப்பு தொடங்கியது! மீண்டும் ஜசெக வெல்லுமா?

சண்டாக்கான்: வாக்களிப்பு தொடங்கியது! மீண்டும் ஜசெக வெல்லுமா?

633
0
SHARE
Ad
நம்பிக்கைக் கூட்டணி – ஜசெக வேட்பாளர் விவியன் வோங்

சண்டாக்கான் – வரிசையாக மூன்று இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த நம்பிக்கைக் கூட்டணி, இன்று சனிக்கிழமை நடைபெறும் சண்டாக்கான் இடைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தனது அரசியல் முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சண்டாக்கான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நீண்ட காலமாக, சண்டாக்கான் மக்களைத் தனது சேவைகளால் கவர்ந்தவருமான ஸ்டீபன் வோங் மறைவைத் தொடர்ந்து நடைபெறும் இடைத் தேர்தலில் அவரது மகளான விவியன் வோங்கையே வேட்பாளராக ஜசெக களமிறக்கியிருப்பதால், அவர் இங்கே எளிதாக வெல்ல முடியும் என கணிக்கப்படுகிறது.

எனினும் பிபிஎஸ் கட்சி ஜசெகவுக்கு எதிராகக் கடுமையான போட்டியை வழங்கி வருகிறது. தேசிய முன்னணி இங்கே போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு பிபிஎஸ் கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு

#TamilSchoolmychoice

இன்று காலை 7.30 மணியளவில் சண்டாக்கானின் 19 வாக்களிப்பு மையங்களில் 90 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு வாக்களிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியிருக்கிறது. சுமார் 136 காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சண்டாக்கானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வோங்

சண்டாக்கானில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் போட்டியிடும் வேளையில், ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் போட்டியிடுகிறார்.

இவர்களை தவிர்த்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.  முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லாசியா சியூ யோங் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த மார்ச் 28-ஆம் தேதி சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்ஸ்டீபன் வோங் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டு சட்டமன்றங்களைக் கொண்டுள்ள சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 40,131 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 270 வாக்காளர்களுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஏற்கனவே நடைபெற்று முடிந்திருக்கிறது.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், 10,098 பெரும்பான்மை வாக்குகளுடன் ஜசெக கட்சி வேட்பாளரான ஸ்டீபன் வோங் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ லிம் மிங் ஹூவை தோற்கடித்தார்.