Home இந்தியா தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 13; அதிமுக: 9

தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 13; அதிமுக: 9

855
0
SHARE
Ad

சென்னை – நடைபெற்ற தமிழ்நாட்டுக்கான 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக 13 தொகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி இருக்கும் வேளையில், அதிமுக 9 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இடைத் தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளும் முன்பு அதிமுக கைவசம் இருந்தது என்பதால் இதில் 13 தொகுதிகளைத் தன்வசம் திமுக எடுத்துக் கொண்டது அந்தக் கட்சியின் சாதனையாகவும், ஸ்டாலினின் தனிப்பட்ட  வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

இனிமேல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மிகக்  குறைந்த பெரும்பான்மையில் தொடரப் போகிறது அதிமுக ஆட்சி.

#TamilSchoolmychoice

திமுக தொடர்ந்து முயற்சி எடுத்து அதிமுக ஆட்சியைக் கவிழ்க்குமா?  அல்லது பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அதிமுக ஆட்சி தொடருமா? என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

எப்படியும் அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற பாஜக தொடர்ந்து முட்டுக் கொடுத்து வரும் என்பதால், ஆளுநரைக் கொண்டோ, மத்திய அரசாங்கத்தைக் கொண்டோ அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க வாய்ப்பில்லை.

ஆனால், அதிமுக ஆட்சிக்கு சில சட்டரீதியான பிரச்சனைகள் இருக்கின்றன. உதாரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது.

அதுபோன்ற சட்டரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டால் மட்டும் அதிமுகவின் ஆட்சி கவிழும், தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுமே தவிர, அப்படி எதுவும் இல்லையென்றால் எஞ்சிய தவணைக் காலத்திற்கும் அதிமுக ஆட்சியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.