புது டில்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், வருகிற 30-ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனிப் பெரும்பான்மையாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணிக் கட்சியினருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்திருந்தது.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நரேந்திர மோடி வழங்கினார்.
இந்நிலையில், நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வருகின்ற 30-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகின்ற 30-ஆம் தேதி மாலை 7 மணியளவில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்பார் என்றும், நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையும் அன்றைய தினம் பொறுப்பேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.