பிரிட்டன்: இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18-ஆம் தேதியன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அவ்வகையில், பிரிட்டன் தலைநகர் இலண்டனில், ‘இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்‘ என்ற பெயரில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கண்காட்சியில் இலங்கை உருவானது முதல் தமிழ் கலாசாரத்தின் தொன்மை வரையும், உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரையும் பல்வேறு அம்சங்களை விளக்கும் ஓவியங்கள், மாதிரி பொருட்கள், ஆவணப்படங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசுப் படைகளுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். மேலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்ததாக ‘தமிழ் தகவல் நடுவம்‘ என்ற அமைப்பு கூறியது.