ஏப்ரல் 3 – பகாங் மாநிலத்திலுள்ள சபாய் சட்டமன்றத் தொகுதி ம.இ.கா போட்டியிட்டு வென்று வந்துள்ள ஒரே மாநில சட்டமன்ற தொகுதியாகும்.
ஆனாலும், கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) காமாட்சி துரைராஜூ தீவிரமாக பிரச்சாரம் செய்து வெறும் 145 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதனால், இந்த முறையும் சபாய் சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்கு காமாட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த முறை காமாட்சி ம.இ.கா வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றிக் கனியைப் பறிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம் கடந்த இரண்டு தவணைகளாக ம..இகா சார்பாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்த டத்தோ தேவேந்திரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.
ம.இ.காவின் வேட்பாளர் புதியவராக இருப்பார் என்பதால் ஏற்கனவே சபாய் வாக்காளர்களிடையே நன்கு அறிமுகமான காமாட்சி துரைராஜூ இந்த முறை எளிதாக வெற்றி பெறக் கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன.
13வது பொதுத் தேர்தலில் சபாய் சட்டமன்றத்தின் மொத்த வாக்காளர்கள் 10,900 ஆகும். இதில் 40 சதவீதம் சீனர்களும் மலாய்க்கார வாக்காளர்கள் 36 சதவீதமும் உள்ளனர். இந்தியர்கள் 20 சதவீதம் இருக்கின்றனர். இந்தியர்கள் அதிகமாக வாக்காளர்களாக இருக்கின்ற சட்டமன்ற தொகுதிகளில் சபாய் சட்டமன்றமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை பொதுத் தேர்தலில் ஜசெக இரண்டு இந்திய பெண் வேட்பாளர்களை களமிறக்கின்றது.
சபாய் தொகுதியில் காமாட்சி துரைராஜூ போட்டியிடுவது உறுதி என்ற நிலையில் பெட்டாலிங் ஜெயா, புக்கிட் காசிங் தொகுதியில் மறைந்த ஜசெக தலைவர் பி.பட்டுவின் மகள் கஸ்தூரி போட்டியிடுவார் என தெரிகின்றது.