Home One Line P1 அரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ

அரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ

1283
0
SHARE
Ad
காமாட்சி துரைராஜூ – கோப்புப் படம்

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை மஇகா தலைமையத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவில் ,  ஜசெக கட்சியைச் சேர்ந்த, சபாய் (பகாங்) சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

காமாட்சி துரைராஜூவின் தமிழ் ஆர்வமும், உணர்வும் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும், வைரமுத்துவின் நூல் அறிமுக விழா, முழுக்க முழுக்க மஇகா தலைவர்களின் ஏற்பாட்டில், அதுவும் மஇகா தலைமையகக் கட்டடத்திலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான், ஜசெகவில் தீவிரமாக இயங்கி வருபவரும், மஇகாவுடன் பல வேளைகளில் அரசியல் முரண்பாடுகள் கொண்டவருமான காமாட்சி அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது.

வைரமுத்துவின் தமிழ் உரையைக் கேட்டு இன்புறவும், அவரது நூலுக்கு ஆதரவு வழங்கவும், அரசியல் பேதங்களைக் கடந்து காமாட்சி நிகழ்ச்சிக்கு வருகை தந்தது அவர் மீதான மதிப்பையும் மரியாதையையும் மேலும் பன்மடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் மத்தியில் உயர்த்தியது எனலாம்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், காமாட்சியை மரியாதையாக அழைத்து, முன்வரிசையில் அமர வைத்ததோடு, நிகழ்ச்சியில் பேசிய பிரமுகர்கள் அனைவரும், காமாட்சியின் பெயரையும் மறவாமல் குறிப்பிட்டனர்.

பின்னர் நூல்கள் வழங்கப்பட்ட போதும், காமாட்சியின் பெயர் அழைக்கப்பட்டு, அவருக்கும் நூல் வழங்கப்பட்டது.

இதே நிகழ்ச்சியில், தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை நிரந்தரமாக நிறுவப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அறிவித்தார்.