கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை மஇகா தலைமையத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’ நூல் அறிமுக விழாவுக்குத் தலைமையேற்று உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சித் துறை நிரந்தரமாக நிறுவப்படுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அறிவித்தார்.
அரசியல்வாதிகள், வணிகர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட திரளான மக்கள் “தமிழாற்றுப் படை” நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
“இந்தியாவுக்கு வெளியே தமிழர்களால் நிறுவப்பட்டிருக்கும் ஒரே மருத்துவப் பல்கலைக் கழகம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகமாகும். உலக நாடுகளிலும் குறிப்பாக நமது அருகிலிருக்கும் தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருக்கும் தமிழ் மொழி குறித்து முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தற்போது மற்ற உள்நாட்டு பல்கலைக் கழகங்கள் முன்வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, நாமே சிறந்த தமிழ் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவ முயற்சிகள் எடுத்திருக்கிறோம்” என்றும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்கும் எம்ஐஇடி அறவாரியத்தின் தலைவருமான விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் இத்தனை ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருவதற்கு அடித்தளம் அமைத்ததும், பாடுபட்டதும் மஇகாதான் என்றும் தெரிவித்த, விக்னேஸ்வரன், தமிழ் மொழி இந்த நாட்டில் நிலைத்திருக்க மஇகா தொடர்ந்து பாடுபட்டு வரும் என்றும் உறுதி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வைரமுத்துவுக்கு விக்னேஸ்வரன் மாலை அணிவித்து சிறப்பித்தார்.
நூலாசிரியர் வைரமுத்து, நிகழ்ச்சியில், விக்னேஸ்வரன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சரவணன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நிகழ்ச்சியின் இறுதியில் விருந்துபசரிப்பும் வழங்கப்பட்டது.