கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபதாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஏஷான் பெர்டானா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் தமது அம்பேங்க் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது குறித்த விவரம் தெரிந்ததும், நஜிப் ஆச்சரியம் அடைந்ததாக, ஏஷான் பெர்டானா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் ஷாம்சுல் அன்வார் சுலைமான் கூறினார்.
சமூக பொறுப்புணர்வு திட்டங்களை (சிஎஸ்ஆர்) செயல்படுத்த, ஏஷான் பெர்டானா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையம் தம்மை கைது செய்து விசாரித்ததற்கு பிறகு நஜிப்பின் வீட்டில் அவரை சந்தித்தப்போது, நஜிப் ஆச்சரியத்தில் இருந்ததாக ஷாம்சுல் கூறினார். தமது வங்கிக் கணக்கில் 42 மில்லியன் பணம் எப்படி வந்தது என்ற கேள்விகளுடன் நஜிப் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
“அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். நஜிப்பின் கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்காக ஏஷான் பெர்டானா நிறுவனம் பயன்படுத்தப்பட்டதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” என்று ஷாம்சுல் கூறினார்.
இந்த விவகாரம் தெரிந்ததும் தமது ஏமாற்றத்தை தெரிவித்த நஜிப், இது குறித்து காவல் துறை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யுமாறு தம்மை கேட்டுக் கொள்ளவில்லை என ஷாம்சுல் கூறினார்.