புதுடில்லி – பாஜக அமைச்சரவையில் இடம் பிடித்து நேற்று வியாழக்கிழமை பதவியேற்றவர்களில் நிதியமைச்சர் பதவி யாருக்குப் போகும் என்பதே முதன்மை ஆரூடமாக நேற்று முதல் ஊடகங்களில் உலா வந்தது.
நிதியமைச்சர் பதவி அமித் ஷாவுக்குக் கிடைக்கலாம் எனப் பரவலாகக் கருதப்பட்ட நேரத்தில் நிதியமைச்சர் பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதாகப் பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத் துறை பட்டதாரியான நிர்மலா சீதாராமன் மோடியின் முதல் தவணை ஆட்சியில் வர்த்தகத் தொழில் துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றினார். ரபேல் ஊழல் நாடாளுமன்றத்திலும், மேலவையிலும் வெடித்த போது, நாடாளுமன்றத்தில் அவர் நேரடியாகக் களமிறங்கி விவாதத்தில் ஈடுபட்டதும், எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கட்டம் கட்டமாக பதிலடி கொடுத்ததும் பாஜக கட்சியினரையும், பொதுமக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து நிதியமைச்சராகவும் அவர் பொறுப்பு ஏற்றிருப்பது, அவரது திறனுக்கும் ஆளுமைக்குமான இன்னொரு சான்றாகும்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து அவர் இந்திய நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் என்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
மோடியின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள். மற்றொருவர் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெய்சங்கர் சுப்பிரமணியம்.
பெண்களுக்கு மோடி அமைச்சரவையில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக நிர்மலா சீதாராமனின் நியமனம் பார்க்கப்படுகிறது.
அதிலும் இதற்கு முன் இந்தியாவில் நிதியமைச்சராகப் பதவி வகித்த ஒரே பெண்மணி இந்திரா காந்திதான். அவருக்குப் பிறகு இந்திய அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பதவி வகிக்கும் பெண்மணி நிர்மலா சீதாராமன்தான் என்பது அவரது நியமனத்திற்கு கிடைத்திருக்கும் இன்னொரு பெருமையாகும்.