புது டில்லி: 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற முதல் யூடியூப் இணையத்தளமாக டி-சீரிஸ் திகழ்கிறது. யார் அதிக சந்தாதாரர்களை வைத்திருக்கிறார்கள், எந்த தளம் முதலில் 100 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், பாலிவுட்டில் பிரசித்திப் பெற்ற டி-சீரிஸ் அந்த அங்கீகாரத்தை வென்றுள்ளது.
டி–சீரிஸ் (T-Series) மற்றும் பெவ்டைபை (PewDiePie) என்ற இரு யூடியூப் இணையத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் இறுதியில் டி-சீரிஸ் வென்றுள்ளது.
யூடியூப்பில் முதன் முதலில் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றதை இந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
“உலகின் மிகப்பெரிய யூடியூப் இணையத்தளம் டி–சீரிஸ், 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று, இவ்வளவு சந்தாதாரர்களை பெற்ற முதல் தளம் என்ற பெருமையை பெற்றுள்ளது. எங்களுடன் இருந்தமைக்கு நன்றி. டி–சீரிஸ் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.” என்று டி–சீரிஸ் பதிவிட்டுள்ளது.
இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. டி–சீரிஸ் என்ற நிறுவனம் முதன் முதலாக 1983-ஆம் அண்டு இந்தியாவில் குல்சன் குமார் (Gulshan Kumar) என்பவர் நிறுவினார்.
இந்த நிறுவனம் இந்தியாவில் டில்லியில் முதன் முதலில் நிறுவப்பட்டது. இவரின் மறைவிற்குப் பிறகு, இவரின் மகன் பூசன் குமார் (Bhushan Kumar), இந்த நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் பதிவியில் அமர்ந்தார். பூசன் குமார்தான், 2006-ஆம் அண்டு, டி–சீரிஸ் நிறுவனத்திற்கென ஒரு யூடியூப் இணையத்தளத்தை உருவாக்கினார்.