புது டில்லி: 2017 மற்றும் 2018-இல் இந்திய நாட்டில் வேலையில்லாத பிரச்சனையின் அளவு 6.1 விழுக்காடாக பதிவாகி உள்ளதாக பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு செய்தித்தாள் கடந்த ஜனவரியில் வெளியிட்டிருந்தது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நிலையில் ஜனவரியில் வெளியான இந்த தகவலை மத்திய அரசு தற்போது உறுதி செய்துள்ளது.
இருப்பினும் முன்னர் வெளியான புள்ளி விவரங்களை மறுத்திருக்கும் தலைமை புள்ளியியல் அதிகாரி பிரவீன் ஸ்ரீவஸ்தவா, இந்த தகவல்கள் புதிய அளவுகோல்படி எடுக்கப்பட்டவை என்றும், முன்னர் வெளியான தகவலுடன் இதனை ஒப்பிடுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயினும், பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு செய்தித்தாள் வெளியிட்ட அந்த தகவல் அதிகாரப்பூர்வமானதல்ல. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில் தற்போது புதிய தகவலை அரசு வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.