நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வீறு கொண்டு எழுந்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பாகிஸ்தான் இரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டியது.
முதல் பாதி ஆட்டத்தில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தான் 348 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தது.
அதனை முறியடிக்க, 349 ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை நடந்த ஆட்டங்களில் ஜூன் 2-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்காளதேசம் எடுத்த 330 ஓட்டங்கள்தான் மிக அதிகானதாகும். பாகிஸ்தான் தற்போது அதனை முறியடித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை வேல்ஸ் கார்டிப் நகரில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் விளையாடவிருக்கின்றன.