கோலாலம்பூர்: 253 மில்லியன் கடனை மீண்டும் பெறும் வகையில் அரசாங்கம் நேஷனல் பீட்லோட் கார்பரேஷன் (என்எப்சி) தலைவரான டத்தோஶ்ரீ டாக்டர் முகமட் சாலே இஸ்மாயில் மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளின் மீது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.
முகமட் சாலே, முன்னாள் மகளிர், குடும்ப மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சர் டாஶ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலிலின் கணவராவார்.
அவர் கீழ் இயங்கும் ஐந்து நிறுவங்களின் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் மீட் அண்ட் லைப்ஸ்டோக் கார்பெரேஷன் செண்டெரியான் பெர்ஹாட், மீவோர்க்ஸ் கார்ப்ரெஷன் செண்டெரியான் பெர்ஹாட், அக்ரோசைன்ஸ் இண்டாஸ்திரிஸ் செண்டெயான் பெர்ஹாட், ஆசியான் பைஒசைன்ஸ் கார்பெரேஷன் செண்டெரியான் பெர்ஹாட் மற்றும் டெக்னோலோஜி இமேஜ்வேர் செண்டெரியான் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்திடமிருந்து பெற்றக் கடனைத் திருப்பிப் பெற என்எப்சி மற்றும் ஷரிசாட் குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் முன்னதாக கூறியிருந்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டில் ஷாரிசாட் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் என்எப்சி திட்டத்தில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதாரத்தை தேசிய கணக்காய்வாளர் அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.