நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை இங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம் பரபரப்பான ஒன்றாக அமைந்தது.
முதல் பாதி ஆட்டத்தில் பந்து வீசிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியா 150 ஓட்டங்கள் எடுப்பதற்கு முன்பாகவே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெகு சுலபமாக இந்த ஆட்டத்தில் வென்று விட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வலுவான ஆஸ்திரேலியா அணியின் ஆட்டக்காரர்கள் நின்று நிதானமாக விளையாடி, 49-வது ஓவருக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தாலும் 288 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தனர்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் முதல் ஆட்டக்காரராகக் களமிறங்கிய கிரிஸ் கேல்லுக்கு எதிராக ஆட்ட நடுவர் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அந்தத் தீர்ப்புகளுக்கு எதிராக கிரிஸ் கேல் மறு ஆய்வு செய்யுமாறு கோரியதைத் தொடர்ந்து அந்த இரண்டு தீர்ப்புகளும் மறு ஆய்வில் கிரிஸ் கேல்லுக்கு சாதகமானதாக அமைந்தன.
இதுவும் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவடைந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவைச் சந்திக்கிறது.
இன்று வெள்ளிக்கிழமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.